இலையுதிர்காலம் போன்றது முதுமை… கவனம் தேவை!

 

இலையுதிர்காலம் போன்றது முதுமை… கவனம் தேவை!

முதுமை… இது பலருக்கு பெரும் சுமையான காலமாகிவிடுகிறது. வாழ்க்கையின் பாதி காலத்தில் ஓடி ஓடி உழைத்த பலர் பல்வேறு நோய்களில் சிக்கி முதுமைக்காலத்தை பெரும் சிரமத்துடன் ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலரோ போதுமான அளவு சத்தான உணவுகள் கிடைக்காமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இலையுதிர்காலம் போன்றது முதுமை… கவனம் தேவை!
இலையுதிர்காலம்:
இளமைக்காலம் போல இனிமையான அல்லது கனவு காணும் காலமல்ல முதுமை. இலையுதிர் காலம்போல அவர்களது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் மெல்ல மெல்ல செயலிழந்து வரும் காலம் அது. இத்தனைக்காலம் அவர்களது பேச்சைக் கேட்டவர்கள் இன்றைக்கு அவர்கள் சொல்வது எதையும் பொருட்படுத்துவதில்லை என்னும்போது கண்ணீர் வடிப்பதைத்தவிர வேறு வழியில்லை.

முதுமையில் பெரும்பாலும் பலருக்கு மறதி நோய் வந்து பாடாய்ப்படுத்தும். முன்பெல்லாம் ஒரு தடவை படித்தாலே எளிதில் புரிந்துகொள்ளும் அவர்களால் இப்போதெல்லாம் இரண்டு, மூன்று தடவை படித்தாலும்கூட எதையும் நினைவில் வைக்க முடியவில்லை. அவர்களது குணங்களில்தான் எத்தனை மாற்றங்கள்?

இலையுதிர்காலம் போன்றது முதுமை… கவனம் தேவை!
ருத்ர தாண்டவம்:
`அன்றைக்கு பொறுமையின் சிகரமாக இருந்தவர் இன்றைக்கு சில நேரங்களில் ஆத்திரப்படுகிறார். கோபத்தில் எதையாவது சொல்லிவிடுகிறார்’ என்று அங்கலாய்ப்பவர்களைப் பார்க்க முடிகிறது. அதேபோல் முன்பு ருத்ர தாண்டவமாடிய சிலர் இன்றைக்கு பெட்டிப்பாம்பாக சுருண்டு கிடக்கிறார்கள். இதனால்தான் சிலர் `எப்பிடி இருந்த மனுசன் இன்னைக்கி இப்பிடி மாறிட்டார்’ என்று சொல்லி ஆச்சர்யப்படுவார்கள்.

எலும்புகளில் உள்ள தாதுப்பொருள்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுவதால் மூட்டு வலி வரும். பற்கள் விழத்தொடங்கும்; ஈறுகள் அழுகத் தொடங்கும். இதனால் பொக்கை வாய் மனிதர்களாகி அவர்களது பேச்சில் தடுமாற்றம் ஏற்படும். பற்கள் இல்லாததால் விரும்பியதைச் சாப்பிட முடியாமல் சிரமப்படுவார்கள்.

இலையுதிர்காலம் போன்றது முதுமை… கவனம் தேவை!எச்சில் சுரப்பு:
எச்சில் சுரப்பு குறைந்துவிடும் என்பதால் நாக்கில் சுவை தெரியாது. உண்ட உணவு செரிமானமாகாமல் சிரமப்படுவார்கள். அரை கிலோ மட்டன் கறியை ஒற்றை மனிதனாக சாப்பிட்டு ஏப்பம் விட்டவரால் இன்றைக்கு ஒரு துண்டுக் கறியைக்கூட சாப்பிட முடியாமல் கண்ணீர் வடிப்பார். இப்படி உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்துபோவதால் பார்வைக்குறைபாடு, இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு என தொல்லைகள் தொடரும்.

இப்படியாக முதுமைக் காலத்தில் வரும் துன்பங்கள் பல. எனவே, முதியோர் நலனில் அக்கறை காட்ட வேண்டும். முதுமைக் காலத்தில் அவர்களுக்கு சத்தான உணவுகளை உண்ணக் கொடுக்க வேண்டும். நாமும் ஒருநாள் முதுமை அடைவோம் என்பதை கருத்தில்கொண்டு முதியோரை மதித்து நடப்போம்.