• December
    15
    Sunday

Main Area

Main



ராமாநுஜரும், கூரத்தாழ்வாரும் மீட்ட காஷ்மீர்! அதிர வைக்கும் ஆன்மிக வரலாறு

ராமாநுஜர்
ராமாநுஜர்

கடந்த வாரம் முழுக்கவே காஷ்மீரில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைப் பற்றிய பேச்சு தான் விவாதமாக உலகம் முழுவதும் நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஆன்மிக அன்பர்களுக்கு தெரியாத தகவலாக சுமார்  950 ஆண்டுகளுக்கு முன்பாகவே காஷ்மீர் மீட்பு நடந்திருக்கிறது. அப்போதைய காலக்கட்டத்தில் ராமாநுஜரும், அவருடைய முதன்மை சீடருமான கூரத்தாழ்வாரும் காஷ்மீர் மீட்பை நடத்திக் காட்டினார்கள். அப்போதே அங்கிருந்தவர்களின் எதிர்ப்பையும் சமாளித்து விசிஷ்டாத்வைதக் கோட்பாடுகளை காஷ்மீரில் நிலைநாட்டினார்கள். காஷ்மீரில் கல்விக்கு தேவதையான ஸ்ரீ சரஸ்வதி தேவியே ராமாநுஜரை மெச்சி "ஸ்ரீபாஷ்யகாரர்" எனும் பட்டம் சூட்டினார். 
ராமாநுஜரின் மானசீக ஆசார்யர் ஶ்ரீ ஆளவந்தாருக்கு மூன்று ஆசைகள் இருந்தன. தம் காலத்தில் நிறைவேற்ற முடியாத அந்த மூன்று ஆசைகளை, ராமானுஜர் முடித்து வைக்கப் பிரதிக்ஞை எடுத்துக் கொண்டார். முதல் ஆசையான 'வேத வியாசரின் பிரம்ம சூத்திரத்துக்கு விரிவான வியாக்யானம் எழுத வேண்டும்' என்பதை மிக விரைவில் முடிக்க வேண்டும் என்று ராமாநுஜர் திருவுள்ளம் கொண்டார். பிரம்ம சூத்திரத்துக்கு ஏற்கனவே 'போதாயான மஹரிஷி' எனும் வேதவியாஸரின் சிஷ்யர் எழுதியுள்ள போதாயன விருத்தி எனும் பாஷ்யத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைப் பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தார். ஆனால் அந்தக் கிரந்தம் எங்கும் கிடைக்க வில்லை. அதனுடைய சுருக்கம் ஒன்று காஷ்மீரத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டார். போதாயன விருத்தி மூலம்,2 லட்சம் படிகளை உடையது. ஆனால் காஷ்மீரில் இருந்த சுருக்கம் 25,000 படிகளை மட்டுமே கொண்டது. உடனே கூரத்தாழ்வாருடன், ஶ்ரீரங்கத்திலிருந்து காஷ்மீருக்குப் புறப்பட்டார் ராமாநுஜர். மூன்று மாதங்கள் நடந்து சென்று இருவரும் காஷ்மீரை அடைந்தனர்.

saraswathi devi

காஷ்மீர் மன்னரிடம் அங்குள்ள, சரஸ்வதி பீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் போதாயன விருத்தி கிரந்தத்தைத் தருமாறு கேட்டார். மன்னர் இசைந்தாலும், அங்கிருந்த பண்டிதர்கள் ஒரு முறை மட்டுமே படிக்க அனுமதித்தனர். ராமானுஜர், கூரத்தாழ்வாரை, அரசவையில் அதைப்படிக்கச் சொல்லிக் கேட்டார். மன்னர் "நீர் கேட்டதின் சாராம்சத்தை எழுதிக் கொடும். அதை சரஸ்வதி தேவி ஒப்புக் கொண்டால் நீர் கிரந்தத்தை எடுத்துச் செல்லலாம்" என்றார்.
ராமானுஜர் அப்பொழுதே சாராம்சத்தை மட்டுமல்லாது, தமது தத்துவார்த்த விளக்கத்தையும்,ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொடுத்தார். மன்னர் அந்தஓலைச்சுவடியை சரஸ்வதியின் காலடியில் சமர்ப்பித்து, கோவிலைப் பூட்டி விடும்படி பணித்தார். மறுநாள் காலை மன்னர், பண்டிதர்கள், ராமானுஜர், கூரத்தாழ்வார் ஆகியோர் கோவிலைத் திறந்து பார்த்தபோது, சரஸ்வதியின் திருவடியில் வைத்த ராமானுஜரின் ஓலைச்சுவடிகள், சரஸ்வதியின் திருமுடியில் இருந்தது கண்டு அனைவரும் பிரமித்து நின்றனர்.

ramanajur

மன்னர் மிக வியந்து, ராமானுஜரின் மகத்துவத்தை உணர்ந்து, அவருக்குத் தண்டம் சமர்ப்பித்து, கிரந்தத்தை ராமானுஜர் எடுத்துச் செல்வதற்கு அனுமதி அளித்தார். ஆனால் அங்கிருந்த பண்டிதர்கள், ராமானுஜர் புதிய விளக்கவுரை எழுதினால் தங்கள் முக்கியத்துவம் பறி போய்விடும் என்று அஞ்சினர். எனவே ராமானுஜரும், ஆழ்வாரும் திரும்பிச் சென்ற வழியில், ஒரிரவு தங்கியிருந்த இடத்திலிருந்து, அந்த ஓலைச் சுவடிகளைக் கவர்ந்து கொண்டு சென்று விட்டனர். சுவடிகளைப் பறிகொடுத்த ராமானுஜர் கலக்கமடைந்து கூரத்தாழ்வாரிடம் ‘இனி என்ன செய்வது?’ என்று சோகத்துடன் கேட்க, ஆழ்வார், ‘ஸ்வாமி.அடியேன் ஒரு முறை படித்து விட்டதால் அப்படியே பதத்துக்குப் பதம் நினைவிருக்கிறது. இங்கேயே சொல்லவா? இரண்டு ஆற்றுக்கு நடுவில் (ஸ்ரீரங்கத்தில்) சொல்லவா!" என்று கேட்டார்.
சத்தை மெச்சிய உடையவர், எத்தகைய சீடரைப் பெற்றிருக்கிறோம் என்று பெருமைப்பட்டார் ராமாநுஜர். ஶ்ரீரங்கம் வந்து சேர்ந்த பின் பிரம்ம சூத்திரத்திற்கு அற்புதமான வியாக்யான உரை எழுதி முடித்தார். ராமானுஜர் சொல்லச்சொல்ல, ஆழ்வார் ஓலைச் சுவடிகளில் எழுதிக் கொண்டே வந்தார். அந்த உரையே ராமானுஜர் இயற்றிய கிரந்தங்களில் மிக முக்கியமான "ஶ்ரீ பாஷ்யம்" எனப்படுகிறது.
ராமாநுஜர் தம் இரணடாவது காஷ்மீர் விஜயத்தில்,  ஶ்ரீ சரஸ்வதி தேவியைச் சேவிக்க சரஸ்வதி (சாரதா) பீடத்துக்குச் சென்றார். அவரை,சரஸ்வதி தேவியே பீடத்திலிருந்து, இறங்கி வந்து வரவேற்றாராம். இவரது ஸ்ரீபாஷ்ய கிரந்தத்தைத் தம் சிரசால் வகித்து, தன் கையை நீட்டி, உடையவர் திருக்கையைப் பிடித்துக் கொண்டு போய், இது பிரஷிப்தமன்று, சுத்தமாயிருந்தது என்று அங்கீகரித்து, இவருக்கு "ஶ்ரீ பாஷ்யகாரர்" என்று திருநாமம் சாத்தினார். மேலும் ஶ்ரீ சரஸ்வதிதேவி தாம் வணங்கிவந்த "லக்ஷ்மிஹயக்கிரீவர்" விக்ரகத்தையும்.ராமானுஜருக்குத் தந்தருளினார். 
இந்த வைபவத்தைக் கேள்வியுற்ற காஷ்மீர் மன்னர் ராமாநுஜரின் பரம சீடராகி, அவருடைய அருளுரைகளைத் தினமும் கேட்டு வந்தார். இதனால் பொறாமையடைந்த அரசவைப் பண்டிதர்கள், மந்திர, தந்திரங்களால் ராமானுஜரைக் கொல்லத் தீர்மானித்து, அதற்கான ஷூத்ர ஜபங்களில் இறங்கினார்கள். ஆனால் விபரீதமாக, சூன்யம் வைத்தவர்கள் மீதே, ஷூத்ர தேவதைகள் திரும்ப அரசவைப் பண்டிதர்கள், திடீரெனத் தெருக்களில் பைத்தியக்காரர்களாக, நிர்வாணமாகத் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு ஓடினார்கள். ஒருவர் கழுத்தை இன்னொருவர் பிடித்துப் புரண்டனர். இதைப் பார்த்த மன்னர் ராமானுஜர் திருவடிகளில் மண்டியிட்டு,"இந்த அபராதிகளை மன்னித்து அருள வேண்டும்" என்றார்.

ramanujar

"மன்னா! அடியேன் இவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஷீத்ர தேவதைகளை இன்னொருவர் மீது ஏவும் போது, அவர், அவை அணுக முடியாத சுத்தன் ஆக இருந்தால், அவைகள் ஏவியவர் மீதே திரும்பி விடும்" என்ற ராமானுஜர் மன்னரின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் மீது தம்  ஶ்ரீ பாததீர்த்தத்தைப் புரோஷிக்க, அவர்கள் சித்த வாதீனமடைந்து, உடையவரைச் சரணடைந்தார்கள்.
சரஸ்வதி கோவில் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதியில், நீலம் நதிக்கரையில் சாரதா எனும் குக்கிராமத்தில், ஶ்ரீநகரிலிருந்து 70 மைல்கள் தூரத்தி, கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்தில் மிகச் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. பூஜைகள், ஆராதனைகள் எதுவும் நடைபெறுவதில்லை. 2007ல் பாகிஸ்தான் அரசின் அனுமதி பெற்று இங்கு சென்ற காஷ்மீர் பண்டிதர்களையும் கோவில் வளாகத்துள் விடவில்லை!
பண்டைக் காலத்தில் இந்த ஊர் பெரு நகரமாக "சர்வ ஞான பீடம்" ஆகத் திகழ்ந்தது. இங்கிருந்து "சாரதா பண்டார்" எனும் நூல் நிலையம் உலகின் மிகப் பெரிய நூல் நிலையமாக பல அரிய ஓலைச் சுவடிகளின் பெட்டகமாகத் திகழ்ந்தது. பல நாடுகளிலிருந்தும் பல சமயங்களைச் சேர்ந்த அறிஞர்களும், பண்டிதர்களும் இங்கு வந்து ஞானம் பெற்றுச் சென்றனர். ஆன்மிகம், அறிவுடமை, அமைதி விளைந்த மண்! உலகமே நிமிர்ந்து பார்த்த உன்னத இடம்! வேதத்தை எதிர்ப்போர், பயங்கரவாதிகள் மண்டிக் கிடக்கும் இடமாக மாறி விட்டது.

2018 TopTamilNews. All rights reserved.