சிறப்பு அந்தஸ்து நீக்கம், 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு என காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக சில எதிர்க்கட்சிகள் கொடி தூக்கின. குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்தனர். சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முன்பாக கடந்த காஷ்மீரில் செல்போன், இன்டர்நெட் என ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு சேவைகளும் முடக்கப்பட்டன. மேலும் அங்குள்ள முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
அதனையடுத்து, காஷ்மீர் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சியில் மக்களுக்கு உரையாற்றினார். அதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் அங்கு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனையடுத்து அங்குள்ள மக்கள் மெதுவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். நேற்று காஷ்மீரில் பக்ரீத் பண்டிக்கையை அங்குள்ள மக்கள் அமைதியாகவும், சந்தோஷமாகவும் கொண்டாடினர்.
இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜம்மு காஷ்மீரில் வன்முறை நடப்பதாக கூறினார். இதற்கு காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக் சரியான பதிலடி கொடுத்தார். சத்ய பால் மாலிக் கூறியதாவது: ராகுல் காந்தி இங்கே வருமாறு அழைக்கிறேன். உங்களுக்காக விமானத்தை அனுப்புகிறேன். இங்குள்ள சூழ்நிலையை பாருங்க, அப்புறம் பேசுங்க.
நீங்கள் பொறுப்புள்ள மனிதன். நீங்கள் அதுபோன்று பேசக் கூடாது. காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதாக சில பேரால் பரப்பப்பட்டது. வெளிநாட்டு செய்தி நிறுவனம் அது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது அந்த நிறுவனத்தை நாங்கள் எச்சரிக்கை செய்தோம். எல்லா மருத்துவமனைகளும் உங்களுக்காக திறந்து உள்ளது. ஒருவரையாவது புல்லட் (துப்பாக்கி குண்டு) தாக்கி இருந்தால் நிருபியுங்கள்.
கலவரம் ஏற்பட்ட போது பொதுமக்கள் 4 பேரின் காலின் மட்டுமே பெல்லட்டுகள் தாக்கியது. ஆபத்தான எந்தவொரு காயங்களும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.