• April
    07
    Tuesday

Main Area

Mainகருணாநிதி சிலை திறப்பு: பெரியாரின் கனவை நினைவாக்கிய மு.க.ஸ்டாலின்

karunanidhi
karunanidhi

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி எப்போதும் ஒரு அரசியல்வாதியாக, மக்கள் பிரதிநிதியாக, ஒரு கட்சியின் தலைவராக தன்னுடைய நிலைப்பாட்டில் எப்போதும் உறுதியுடன் இருந்தவர்.எப்படி சட்டமன்றம் போவதை வழக்கத்தில் வைத்திருந்தாரோ அப்படியே தான் அறிவாலயம் போவதையும் வழக்கத்தில் கொண்டிருந்தார் கலைஞர்.
தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு முன்பு வரை தினமும் அறிவாலயம் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார் கருணாநிதி.

அப்படி அவர் உடலோடும் உயிரோடும் ஒன்றி போன அறிவாலயத்தில் தான் இன்று அவரது சிலை நிறுவப்படுகிறது. கருணாநிதியை பொறுத்தவரையில் அவருக்கும் சிலைகளுக்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது எனலாம்.  

அண்ணா இருக்கும் போதே கருணாநிதிக்கு சிலையா?

 

karunanithi

1967 இல் அண்ணா முதல்வராக பதவியேற்ற சில மாதங்களில் சைதாப்பேட்டையை சேர்ந்த திமுக அபிமானி பவளவண்னன் என்பவர் கருணாநிதிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள ஜெமினி மேம்பாலம் அருகில் பிரம்மாண்ட சிலை அமைக்க பீடம் கட்டினார். இதை அறிந்து கொண்ட கருணாநிதி அதை தடுத்து நிறுத்தியதோடு, கட்டப்பட்ட  பீடத்தையும் இடிக்க சொல்லி உத்தரவிட்டார்.

பெரியாரின் கனவு?

 

periyar

இதை தொடர்ந்து அண்ணாவின் மறைவிற்கு பிறகு, 1971 முதல்வரான கருணாநிதிக்கு தந்தை பெரியார் சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என்றும் அதை தானே தலைமை ஏற்று கண்காணிக்க இருப்பதாகவும் அறிவித்தார். இதை  கேட்ட கருணாநிதி, தந்தை பெரியாருக்கு திமுக சார்பில் சிலை வைத்த பிறகு தனக்கு சிலை வையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். அதன் பிறகு சென்னை சிம்சன் அருகில் பெரியாருக்கு சிலை நிறுவி அதை திறந்து வைத்தார் கலைஞர். 

இதனால் கருணாநிதிக்கு சிலை வைக்கும் பணியை துரிதப்படுத்தினர் திராவிட கழகத்தினர். ஆனால் அதிமுகவோ அதற்கு சட்ட ரீதியான சிக்கலை ஏற்படுத்த அதை சட்டரீதியாகவே முறியடித்து அண்ணா சாலை ஜெனரல் பேட்ரல் சாலையில் கருணாநிதிக்கு முழு உருவ சிலையை நிறுவினர் திராவிட கழகத்தினர். 

சின்னதம்பி என் முதுகில் குத்தவில்லை:

kanunadhi

1987 ஆம் ஆண்டு எம்ஜிஆர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். ஆனால் எம்ஜிஆர் இறப்புக்கு  காரணம் கருணாநிதி தான் என்று கற்பனை செய்த எம்ஜிஆரின் தீவிர விசுவாசி ஒருவர் அண்ணா சாலையில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி சிலையை ஒரு இரும்பு தடி கொண்டு தகர்த்தெறிந்தார். இந்த படம் அன்றைய செய்தித்தாள்களில் தலைப்பு செய்தியாக மாறி போனது.

இதை கண்ட கருணாநிதி,  'உடன்பிறப்பே செயல் பட விட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும், அந்த சின்னதம்பி என் முதுகில் குத்தவில்லை, நெஞ்சில் தான் குத்துகிறான்..அதுவரை நிம்மதி எனக்கு' என்று தனது உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான வரலாறாய் மாறியது. இதை தொடர்ந்து தனக்கு சிலை எடுக்க வேண்டாம் என்று  கருணாநிதியே திராவிட கழகத்தின் கி.வீரமணியை தொடர்பு கொண்டு கேட்டு கொண்டார்.

சிலை அமைக்க வேண்டாம்; ஆனால் சிலை அமைப்பேன்!!

kannagi

தனக்கு சிலை அமைக்க வேண்டாம் என்று கேட்டு கொண்ட கருணாநிதி, தான் முதல்வராக பதவியேற்ற பிறகு மூத்த  மற்றும் முக்கிய தலைவர்கள் பலருக்கும் சிலை அமைத்து கௌரவப்படுத்தினார் என்பது மறுக்க முடியாத உண்மை. தான் ஆட்சிக்கு வந்தது முதல் தனது இறுதிக்காலம் வரை பலருக்கும் கருணாநிதி சிலை அமைத்தது வரலாறாய் மாறின. அப்படி அவர் அமைத்த சிலைகள் சில அரசியலில் முக்கியமானதாகவும், சில சிலைகள் சர்ச்சைகளாகவும் மாறி போயின.

அப்படி ராஜராஜசோழன், கண்ணகி, வள்ளுவர் என தொடங்கி அண்ணா, காமராஜர், காந்தி, ராஜாஜி, எம்ஜிஆர் போன்ற பல  தலைவர்களுக்கு சிலை அமைத்தும், மொழிப்போர் தியாகி சங்கரலிங்கனார், எம்.பக்தவச்சலம், சிங்காரவேலன், மபொசி, தீரன் சின்னமலை, கக்கன் என்று பலருக்கும் சிலை அமைத்தும்  பெருமை சேர்த்திருக்கிறார் கருணாநிதி. அந்த வரிசையில் அமைத்தது தான் அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அண்ணா சிலை. கலைஞர் வைத்த சிலைகளிலேயே முக்கியமானது என்றால் அது வள்ளுவர் கோட்டத்திற்கு எதிரே அமைக்கப்பட்ட அண்ணா சிலை தான் என்று கூறலாம்.

அரசியல் சாணக்கியனின் யுக்தி!

anna

வள்ளுவர் கோட்டத்தை கட்டி எழுப்பிய கருணாநிதி, அதை முறைப்படி திறப்பதற்குள் அவரது அரசு கலைக்கப்பட்டு விட்டது. பின்னர் வள்ளுவர் கோட்டத்தை குடியரசுத்தலைவர் பக்ருதின் அலி அகமது திறந்து வைத்தார். இதனால் வள்ளுவர் கோட்டத்திற்கு எதிரே அண்ணா சிலை நிறுவிய அந்த அரசியல் சாணக்கியன்,  அதற்கு கீழே வள்ளுவர் கோட்டத்தை கட்டிய கலைஞரால் திறந்து வைக்கப்பட்ட சிலை என்று கல்வெட்டில் பொறித்தார்.இப்படி பல தலைவர்களின் சிலைக்கும் கருணாநிதிக்கும் இடையே ஒரு திகைப்பூட்டும் உறவும் வரலாறும் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. 

அப்படிபட்ட கருணாநிதி என்ற ஆளுமை மறைந்த பிறகு அவருக்கு சிலை வைக்கும் முடிவை அவரது மகனும் தற்போது திமுகவின் தலைவருமான முக ஸ்டாலின் கையிலெடுத்தார். அதன்படி மறைந்த  திமுக தலைவர் கருணாநிதிக்கு முழு உருவ சிலை ஒன்று அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரில் கருணாநிதிக்கு சிலை வைக்கவேண்டுமென்ற பெரியாரின் கனவை நிறைவேற்றி இருக்கிறார் முக ஸ்டாலின்.
 

2018 TopTamilNews. All rights reserved.