• April
    05
    Sunday

Main Area

Main



அறிவாலயத்தில் கலைஞருக்கு இடம் கிடைக்குமா?

karunanidhi
karunanidhi

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை அண்ணா அறிவாலயத்தில் அமைக்க தமிழக அரசு சிக்கல் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவை அடுத்து அவருக்கு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலைக்கு அருகே சிலை வைக்க திமுக திட்டமிட்டது. 

அதற்கான சிலையை  திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சிற்பி தீனதயாளன் உருவாக்கி வருகிறார். தற்போது இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால் சிலை திறப்பு நிகழ்ச்சி அடுத்த மாதம் (நவம்பர்) 15-ம் தேதி நடைபெற இருக்கிறது. சிலை திறப்பு நிகழ்ச்சியை தேசிய அளவில் கவனம் பெற செய்யும் விதமாக தேசிய தலைவர்களை அழைக்க திமுக திட்டமிட்டுள்ளது.

statue

ஆனால் அறிவாலயத்தில் அண்ணா சிலைக்கு அருகில் கலைஞருக்கு சிலை வைக்க திறந்தவெளி நிலம் தொடர்பான விதிகளைப் பயன்படுத்தி (ஓஎஸ்ஆர்) தமிழக அரசு சிக்கல் ஏற்படுத்த இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அண்ணா அறிவாலயம் கட்ட திமுக அறக்கட்டளை சார்பில் விண்ணப்பித்து அனுமதி பெறப்பட்டபோது  அரசாணையில் மொத்த நிலத்தில் 10% (முன்பக்கம் மாநகராட்சிப் பூங்கா) அமைக்க திறந்தவெளி நிலம் ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர், திறந்தவெளி பூங்காவை திமுக அறக்கட்டளையே பராமரித்துக் கொள்வது உள்ளிட்ட சலுகைகள் அளிக்கப்பட்டு அந்த ஓஎஸ்ஆர் நிலத்தில் எந்தக் கட்டுமானப் பணியும் இடம்பெறக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் திறந்தவெளி இடத்தை திமுக சரியாக பராமரிக்கவில்லை என கடந்த 2004-ம் ஆண்டு அதிமுக அரசு திமுக தலைமையிடம் விளக்கம் கேட்டது. அதற்கு திமுக தரப்பில் விளக்கமான பதிலும் அளிக்கப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

annaarivalayam

இதனையடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் அளிக்கப்பட்ட பதிலில், கடந்த 2007-ம் ஆண்டு மாநகராட்சி சார்பில் தலைமை பொறியாளர் இடத்தை பார்வையிட்டனர் இதில் எந்தவிதமான விதிமுறை மீறல்களும் இல்லை,மேலும், இடம் முறையாக பராமரிக்கப்படுகிறது எனக்கூறி அதிமுக அரசு விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளித்தது.

இதைத்தொடர்ந்து 2011-16 அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மேயராக இருந்த சைதை துரைசாமி பத்து சதவிகித ஓஎஸ்ஆர் இடத்தைப் பதிவு செய்யவில்லை என்றும் அறிவாலயத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்புச் சலுகைகளை ஏன் ரத்து செய்யக் கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு அப்போதைய திமுக தலைவர் கருணாநிதிய்யும் விளக்கமான பதிலளித்தார்.

palanisamy

இந்நிலையில், தற்போது கருணாநிதிக்கு சிலை வைக்கப்பட இருக்கும் இடமானது ஓஎஸ்ஆர் இடத்தில் வருவதாகவும் அதற்கான பழைய ஆவணங்களை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தூசி தட்டி இருக்கிறார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இதன் மூலம் அண்ணா சிலைக்கு அருகே கலைஞருக்கு சிலை வைக்க தமிழக அரசு சிக்கல் ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்காதபோதே அதிமுக கடுமையான அவப்பெயரை சந்தித்தது. தற்போது சிலை வைக்கும் இடத்திற்கும் அரசு சிக்கல் கொடுத்தால் அது மக்களிடையே கூடுதல் அதிருப்தியை உருவாக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.  இறந்த பிறகு மெரீனாவில் இட ஒதுக்கீட்டிற்காக போராடிய கருணாநிதி தற்போது அண்ணா அறிவாலயத்திலும் இட ஒதுக்கீட்டிற்காக போராடும் சூழல் உருவானால் நிச்சயம் அதிலும் வெல்வார் என்கின்றனர் உடன்பிறப்புகள்.

2018 TopTamilNews. All rights reserved.