கன்னி பெண்களும் காணும் பொங்கலும்…

 

கன்னி பெண்களும் காணும் பொங்கலும்…

பொதுவாக பொங்கல் என்றாலே சாதி, சமய, பேதமின்றி தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் பண்டிகையாகும். பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறுவது காணும் பொங்கல். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர்களிடம் ஆசி பெறுதல் உள்ளிட்டவையும் காணும் பொங்கல் கொண்ட்டாட்டங்களில் அடங்கும்.

காணும் பொங்கல் என்றால் குடும்பத்தினருடன் வீட்டில் சமைத்த உணவை எடுத்துக்கொண்டு பிடித்த இடத்திற்கு செல்வது என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் காணும் பொங்கலன்று கலவையான உணவுகளை சமைத்து உடன் பிறந்தவர்களின் நன்மைகாக, காக்கா குருவிக்கு அன்னமிடவேண்டும். ஆற்றங்ரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ, மஞ்சள் அல்லது வாழை இலைகளை கிழக்கு முகமாய் பார்த்து 5 வகையான சாதங்களை காகத்திற்கு வைத்து படையல் இடவேண்டும். ‘காக்காப்பிடி வச்சேன் கணுப்பிடி வச்சேன், காக்கைக்கு எல்லாம் கல்யாணம். கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம், கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்’ என்றுச் சொல்லி படையல் வைக்க வேண்டும். ஆனால் இந்த வழிமுறை மாறி தற்போது அனைவரும் குடும்பத்துடன் பல சுற்றுலா இடங்களுக்கு செல்கின்றனர்.

கன்னி பெண்களும் காணும் பொங்கலும்…

கன்னி பொங்கல் கன்னி பெண்களுக்காகவும் கொண்டாடப்படுகிறது. அதன்படி கல்யாணம் ஆகாத இளம்வயது பெண்கள் அனைவரும், தாம்பாளத்தில் கரும்புத் துண்டு, கற்கண்டு, பூ, பச்சரிசி, சர்க்கரை, வாழைப்பழம் ஆகியவற்றுடன் மங்கலப்பொருட்கள் எடுத்துக்கொண்டு ஆற்றங்கரை, குளக்கரை, ஏரிக்கரை ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு இடத்திற்கு சென்று கும்மியடித்து பாடல்களை பாடியபடி உற்சாகமாக விளையாடுவர், தொடர்ந்து அங்கு மண் மேடை அமைத்து, தாங்கள் கொண்டுவந்த மங்கலப் பொருட்கள் அடங்கிய தாம்பாளங்களை, மண் மேடையின் மீது வைத்து சீக்கிரம் திருமணமாகவேண்டுமென வணங்குவர்.