ரவுடிக்கு அடைக்கலம் கொடுத்து வசமாக சிக்கிய பாஜக தலைவர்!

 

ரவுடிக்கு அடைக்கலம் கொடுத்து வசமாக சிக்கிய பாஜக தலைவர்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேடப்படும் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டது. இதில் மனோஜ்சிங் என்ற ரவுடியின் தலைக்கு 25 ஆயிரம் விலை வைத்தனர் கான்பூர் காவல் துறையினர். அவரைப் பிடிக்க காவல் துறையினர் தீவிரம் காட்டி வந்ததால், தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இச்சூழலில் இரு தினங்களுக்கு முன் பாஜக தலைவராக இருந்த நாராயண்சிங் பிறந்தநாள் கொண்டாடினார். இவ்விழாவிற்கு அழைக்கப்பட்டவர்களில் ரவுடி மனோஜ்சிங்கும் ஒருவர்.

ரவுடிக்கு அடைக்கலம் கொடுத்து வசமாக சிக்கிய பாஜக தலைவர்!
மனோஜ் சிங், நாராயண் சிங்

இந்தத் தகவலை எப்படியோ தெரிந்துகொண்ட கான்பூர் போலீஸார் மப்டி உடை அணிந்து கைதுசெய்ய காத்திருந்தார்கள். திட்டமிட்டபடி மனோஜ் சிங்கை அவர்கள் கையும் களவுமாகப் பிடித்தனர். அவரை ஜீப்பில் ஏற்ற முயன்றபோது நாராயண் சிங்கின் ஆதரவாளர்கள் ஜீப்பை மறித்தனர். இதனைப் பயன்படுத்தி மனோஜ்சிங் தப்பியோடினார். இந்தக் காட்சிகளை வீடியோ எடுத்து யாரோ சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இதையடுத்து நாராயண் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 9 பேர் மீது கான்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

பாஜக தலைமையும் நாராயண்சிங்கை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, இதுதொடர்பாக விசாரிக்க குழு அமைத்தது. பின்னர் நாராயண் சிங்கும் தலைமறைவானார். ரவுடியும் இவரும் நொய்டாவில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் தேடுதல் வேட்டையில் இறங்கி இருவரையும் நொய்டாவில் கைது செய்தனர். மனோஜ்சிங் மீது கொலை முயற்சி, ஆள் கடத்தல், கொள்ளை உள்ளிட்ட 27 வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.