ஒரு தேர்வை கூட ஒழுங்காக நடத்த அருகதையற்றவர்கள் மருத்துவக் கல்விக்கு தரம் நிர்ணிக்கிறார்கள் என கனிமொழி எம்.பி பதிவிட்டுள்ளார்.
கடந்த செப்.13ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியாகின. தேர்வு முடிவில் பல மாநிலங்களில் குளறுபடி இருப்பது தெரிய வந்தது. அதாவது, தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது போல தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தன. இது சர்ச்சையை கிளப்பியது. இதே போன்று, பல இடங்களில் தேர்வு முடிவுகளில் குளறுபடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் நீட் தேர்வு குளறுபடி குறித்து திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” 2020 நீட் தேர்வில் நடந்துள்ள குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கிறது. பள்ளியில் முதலாவதாக வந்த சென்னையை சேர்ந்த மாணவர் சாய் அக்ஷய், நீட் தேர்வில் வெறும் பூஜ்யம் மதிப்பெண்களை பெற்றுள்ளது எப்படி சாத்தியமாகும்?.
இதே போல கோவை மற்றும் அரியலூரில் குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்த அருகதையற்றவர்கள், மருத்துவக் கல்விக்கு தரம் நிர்ணயிப்பது வேடிக்கையாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.