காங்கேயம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றதாக வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு!

 

காங்கேயம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றதாக வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு!

திருப்பூர்

காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.எஸ்.ராமலிங்கம் வெற்றி பெற்றதாக கூறி வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர் ஏ.எஸ்.ராமலிங்கம் என்கிற முருகவேல். இவரை எதிர்த்து திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் போட்டியிட்டார். இந்த நிலையில், ஏ.எஸ்.ராமலிங்கம் வெற்றி பெற்றதாக கூறி, காங்கேயம் தொகுதிக்குட்பட்ட பழையபேட்டை பகுதியில் நேற்று அதிமுகவினர் பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த பேனரில், 13 ஆயிரத்து 483 வாக்குகள் வித்தியாசத்தில் ராமலிங்கம் வெற்றி பெற்றுள்ளதாகவும், அவரை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறப்பட்டிருந்ததால் பரபரப்பு கூடியது. இந்த பேனர் குறித்து ஏ.எஸ்.ராமலிங்கத்திற்கு தெரிய வரவே உடனடியாக அதிமுக தொண்டர்கள் அந்த பேனரை அகற்றினர்.

காங்கேயம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றதாக வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு!

தொடர்ந்து, இதுகுறித்து தனது பேஸ்புக் சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்து பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், பேனர் விவகாரத்தில் தனக்கு தொடர்பு இல்லை என்றும், இது தேர்தல் நடத்தை விதிகளுக்கும், கட்சியின் கோட்பாடுகளுக்கும் எதிரானது என்றும் ஏ.எஸ்.ராமலிங்கம் தெரிவித்து இருந்தார். மேலும், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

இதனிடையே, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் முன்பாக வெற்றி என பேனர் வைத்தது ஒருபுறம் இருக்க, வாக்கு வித்தியாசம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றது, அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே கேள்வியை எழுப்பி உள்ளது.