பத்திரம்… பத்திரம்… மஹா பெரியவா காட்டிய கருணை!

 

பத்திரம்… பத்திரம்… மஹா பெரியவா காட்டிய கருணை!

காஞ்சி மடத்தில் ஒருநாள் மதியம் மஹா பெரியவா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரை யாரோ குறுகுறுவென பார்ப்பது போலிருக்க நிமிர்து பார்த்தார். ஜன்னலைப் பிடித்தவாறே குட்டிக் குரங்கு ஒன்று நின்று கொண்டிருந்தது. மடத்தில் இருந்தவர்களிடம் அதற்கு வாழைப்பழம் அளிக்கும்படி சொன்னார். அவர்கள் கொடுக்க, அது பழத்தை வாங்க மறுத்துவிட்டது. அதற்கு கொஞ்சம் சாதம் கொடுக்க சொன்னார். அப்படியே செய்ய, கண் மூடி திறப்பதற்குள் வேகமாக சாப்பிட்டு விட்டு, மரத்தில் ஏறி மறைந்தது.

பத்திரம்… பத்திரம்… மஹா பெரியவா காட்டிய கருணை!

அதன்பிறகு, இதுவே தினமும் வாடிக்கையாகி விட்டது. அதற்கு “கோவிந்தா’ என்று பெயரிட்டு அழைத்தார் மஹா பெரியவா. தினமும் மதியம் மஹா பெரியவா சாப்பிடும் நேரத்தில் அந்த குரங்கும் சாப்பிட வந்துவிடும். அதற்கு உணவு வழங்குவது தொடர்ந்தது. ஒருநாள் நீண்டநேரமாகியும் அந்த குரங்கு சாப்பிட வரவில்லை. இதனால் சாப்பிட மனமின்றி, அந்த குரங்கின் வருகைக்காக மஹா பெரியவா காத்திருந்தார்.

அன்று, மடம் அருகில் இருந்த நாராயண அய்யர் வீட்டின் கதவைப் பூட்டி விட்டு மடத்திற்கு வந்தார். தான் புதிதாக வாங்கிய நிலத்தின் பத்திரத்தை, பெரியவாளிடம் கொடுத்து ஆசி பெறுவதற்காக மதிய நேரத்தில் அவர் வந்திருந்தார். பெரியவாளிடம் ஆசி பெற பத்திரத்தைக் கொடுப்பதற்காக பைக்குள் கையைவிட்டார் நாராயண அய்யர்.

ஆனால், பத்திரத்தைக் காணவில்லை. அவர் திகைத்தார். “நாராயண அய்யரே! என்ன தேடறீர்…. நான் குரங்கைத் தேடறேன். நீர் பத்திரத்தைத் தேடறீரோ…. என்ற பெரியவா” “போங்கோ… போங்கோ…. ஆத்துல போய் தேடிப் பாருங்கோ… நான் தேடுறது மட்டுமில்லாமல், நீங்க தேடுறதும் கிடைக்கும்…” என்றார்.

விறுவிறு என வீட்டுக்கு வந்த அய்யர் கதவைத் திறக்க, சரலேன குரங்கு ஒரு பையுடன் ஓடுவதைக் கண்டார். அந்த பையைப் பார்த்ததும் தான், அதில் பத்திரத்தை வைத்தது நினைவிற்கு வந்தது. குரங்கைத் துரத்தியபடி அவரும் பின்தொடர்ந்தார். தெருவிலுள்ள எல்லாரும் வேடிக்கை பார்த்தனர். ஓடிய குரங்கு மடத்திற்குள் நுழைந்தது.

பெரியவா அதனிடம் அன்புடன், “கோவிந்தா ….. உனக்கு பசிக்கலையா… எங்கே போயிட்ட….” என்று கேட்க, அய்யரும் “ஐயோ குரங்கு … பத்திரம்…. பத்திரம்….” என பதட்டத்துடன் ஓடி வந்தார்.

மஹா பெரியவா அவரிடம், “பயப்படாதீங்கோ…. குரங்கும் பத்திரமா இருக்கு! அதன் கையில் பத்திரமும் பத்திரமாத் தான் இருக்கு” என்று சொல்ல அங்கே ஒரே சிரிப்பு… அதன் பின், தன் முன் குரங்கு போட்ட பத்திரத்தை எடுத்த மஹா பெரியவா, அய்யரிடம் வழங்கி ஆசியளித்தார்.

ஜெய ஜெய சங்கர

ஹர ஹர சங்கர.