நாமக்கல்லில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள 25 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ. 336 கோடி மதிப்பீட்டில் இந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் மாதம் பூமி பூஜை நடத்தினார். தொடர்ந்து கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டிடம் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த கட்டிட விபத்தில் 2 பேர் படுகாயம், 6 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், “ நாமக்கல் மருத்துவக் கல்லூரி, கட்டும் போதே இடிந்து விழுந்திருக்கிறது. மக்கள் வரிப்பணம் 336 கோடி ரூபாய் உருமாறும் கோலம் இது. சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்டி முடித்து அரசியல் ஆதாயம் தேடும் அவசரக் கோலமே இந்த அலங்கோலத்திற்குக் காரணம். உயிர் காக்கும் மருத்துவமனை உருவாகும் போதே உடைந்து போயிருக்கிறது. நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள். நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்யாதிருங்களய்யா. மக்கள் நீதி மலர… தக்க தருணம் இதுவே” எனக் குறிப்பிட்டுள்ளார்.