ஒரு மணி நேர மழை, தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை!- கமல்ஹாசன்

 

ஒரு மணி நேர மழை, தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை!- கமல்ஹாசன்

தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் பருவமழை தொடங்கவிருக்கிறது. பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், மீனம்பாக்கம், அசோக்நகர், கோடம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட பல இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது. தொடர் கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எழும்பூர் மருத்துவமனையிலும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களும், நோயாளிகளும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

ஒரு மணி நேர மழை, தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை!- கமல்ஹாசன்

இந்நிலையில் அடைப்பின் காரணமாகவே மருத்துவமனையில் தண்ணீர் தேங்கியிருந்ததாகவும், தற்போது அது முற்றிலுமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு சரி செய்யப்பட்டதாகவும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் எழிலரசி விளக்கமளித்துள்ளார். வரும் காலங்களில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தண்ணீர் தேங்காத வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் எழிலரசி தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது. கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை. கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை. ஆனாலும் இன்னுமும் வடிகால்கள் வாரப்படவில்லை. குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது வையுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.