உயிர் காக்கும் தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியம்! சாடும் கமல்

 

உயிர் காக்கும் தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியம்! சாடும் கமல்

உயிர் காக்கும் தடுப்பூசிகளைத் தயாரிக்கும் வளாகம் முடங்கிக் கிடக்கலாமா என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிர் காக்கும் தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியம்! சாடும் கமல்

இதுதொடர்பாக, கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தடுப்பூசிக்காக உலகமே தத்தளித்து வருகிறது. பேரிடர் காலத்தில் முழு ஆற்றலையும், கட்டமைப்புகளையும் பயன்படுத்தி உயிர்களைக் காக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் எனும் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறதென்றாலும், அத்தனை பேருக்குமான தடுப்பூசி மருந்துகள் கைவசம் இருக்கிறதா எனும் கேள்விக்குப் பதில் இல்லை.

மொத்த தேசமும் பேரிடரில் சிக்கித் தவிக்கும் போது தடுப்பூசி உற்பத்தி செய்யும் திட்டம் ஒன்று கிடப்பில் போடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய சுகாதார துறையின் கீழ் செயல்படும் ‘ஹெச்.எல்.எல் லைஃப் கேர்’ என்ற பொதுத்துறை நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘இந்துஸ்தான் பயோடெக் (ஹெச்.பி.எல்.)’ எனும் நிறுவனம். உலகத் தரத்திலான தடுப்பூசிகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டத்தின்படி, இந்த நிறுவனத்தின் மூலம் செங்கல்பட்டு அருகே திருமனியில் ரூ.594 கோடி செலவில் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் அமைக்கப்பட்டது.

உயிர் காக்கும் தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியம்! சாடும் கமல்

100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த வளாகம் இன்னமும் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது. உலகத் தரத்திலான தொழில்நுட்ப கட்டமைப்புகள் இருந்தும் இந்தத் திட்டம் செயல்பட போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது பேரதிர்ச்சியைத் தருகிறது. மாதம் 50 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்யும் வசதிகள் இருந்தும் அதை ஊக்கப்படுத்தாமல் இருப்பது மத்திய அரசின் அலட்சியப் போக்கைத்தான் பிரதிபலிக்கிறது. இன்றைய சூழலில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கூடுதலாக சுமார் ரூ.300 கோடி தேவைப்படுவதாக ஹெச்.பி.எல். நிறுவனம் அரசிடம் கோரியுள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க இன்னும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் சூழலில் மத்திய அரசு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை விரைந்து செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். கொரோனா பெருந்தொற்றிலிருந்து காக்கும் தடுப்பூசிகளின் உற்பத்தியை இங்கு தொடங்க வேண்டும். உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தி அதிகரித்தால் மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கலாம். நிறைய உயிர்களைக் காக்கலாம். இந்த வளாகம் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.