அரசியலால் 40 ஆண்டுகால நட்பில் விரிசலா? ரஜினிக்கு வாழ்த்து சொல்லாத கமல்

 

அரசியலால் 40 ஆண்டுகால நட்பில் விரிசலா? ரஜினிக்கு வாழ்த்து சொல்லாத கமல்

ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இயக்குநர் பாலசந்தரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். இருவரும் ஆரம்பம் முதலே நண்பர்கள். ஒன்றாகப் படங்களில் நடித்தவர்கள். கமல்ஹாசனுக்கு 16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த் அதன்பின் தனது ஸ்டைலான நடிப்பால் சூப்பர் ஸ்டாரானார். சுமார் 40 ஆண்டுகால நட்பு அரசியலால் பிளவுப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. திரைப்படத்தில் போட்டி இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல நண்பர்களாக இருந்த ரஜினிக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே இந்த அரசியல் பிரவேசம் மீண்டும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலால் 40 ஆண்டுகால நட்பில் விரிசலா? ரஜினிக்கு வாழ்த்து சொல்லாத கமல்

கடந்த 2017 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பிப்பது உறுதி என அறிவித்தபோது கமல்ஹாசனுடன் இணைந்து செயல்படுவீர்களான என செய்தியாளர் கேட்டபோது, நிச்சயமாக இணைவோம் என்று ரஜினி கூறினார். அதேபோல் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், சட்டசபை தேர்தல் நேரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவை கேட்கப்போவதாக கூறினார். மேலும் ரஜினி எனது நண்பர் என்றும், எல்லோரிடமும் ஆதரவு கேட்கும் போது அவரிடம் மட்டும் கேட்காமல் இருப்பேனா என்றும் தெரிவித்தார். ஆனால் அப்போது ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்து உறுதியாக கூறவில்லை. வரும் ஜனவரி மாதம் கட்சித் தொடங்குவேன் என்றும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி கட்சி தொடங்கும் தேதி அறிவிப்பேன் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் அறிவித்தார். மேலும் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும் நியமித்தார்.

ரஜினியின் இந்த அறிவிப்புக்கு முன்புவரை அவருடன் நட்பு பாராட்டிய கமல்ஹாசன், இன்று அவரது பிறந்தநாளுக்கு கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை. ரஜினியில் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் அவரை கமல்ஹாசன் தனியாக சந்திக்கவில்லை. பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு,க.ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை அள்ளி தெளித்த போதிலும் கமல் ட்விட்டரில் கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனால் அரசியலால் அவர்கள் உறவில் பிளவு ஏற்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி ரஜினியின் கொள்கை கமலுக்கு பிடிக்கவில்லையா? அல்லது கமல் ஆதரவு கேட்டு ரஜினி அதற்கு மறுப்பு தெரிவித்தாரா என்பது புரியாத புதிராகவே உள்ளது.