Home அரசியல் கமல்தான் ரஜினியின் முதல்வர் வேட்பாளர்... கொளுத்திப்போட்ட குமாரவேல்... கட்சி ஆரம்பிக்க தயாராகும் சூப்பர் ஸ்டார்!- பரபர பின்னணி

கமல்தான் ரஜினியின் முதல்வர் வேட்பாளர்… கொளுத்திப்போட்ட குமாரவேல்… கட்சி ஆரம்பிக்க தயாராகும் சூப்பர் ஸ்டார்!- பரபர பின்னணி

“கமலும் ரஜினியும் இணைந்து தேர்தலை சந்தித்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளராக இருப்பார். காரணம், ஏற்கெனவே ரஜினி தனக்கு முதல்வராகும் ஆசையெல்லாம் இல்லை என்று சொல்லிவிட்டார். இருவரும் சேர்ந்தால் பெரிய மாற்றம் நிகழும்” என்று கூறியிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் சி.குமாரவேல்.

1996ல் அரசியலுக்கு வந்துவிடுவார் என்று ரஜினியை எதிர்பார்த்தார்கள் ரசிகர்கள். ஆனால் 21 ஆண்டு கழித்து தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் ரஜினி. அதாவது, 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் முன்னிலையில் முழங்கிய ரஜினி, எப்போது கட்சி ஆரம்பிப்பேன் என்று கூறவில்லை. அரசியவருக்கு வருவேன் என்று அறிவித்து 3 வருடங்கள் ஆகப்போகிறது ஆனால் இதுவரை ரஜினியிடம் இருந்து எந்த ரியாக் ஷனும் வரவில்லை. அவ்வப்போது, பத்திரிகையாளர்களை சந்தித்து தனது கருத்தை வெளிப்படுத்தி வருகிறார். ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பால் அதிர்ந்துபோன நண்பர் கமல், திடீரென மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். 2019 தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் பல்வேறு தொகுதிகளில் குறிப்பாக நகர்ப்புற தொகுதிகளில் நல்ல வாக்குகள் பெற்றது.

ஆனால். எந்த இடத்தையும் கைப்பற்றாத நிலையிலும், 13 இடங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது, அவற்றில் நான்கு இடங்களில் 10 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஒட்டுமொத்தமாக, ஐந்து சதவிகித வாக்குகளைப் பெற்றது. இது அரசியல் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “தான் முதலமைச்சராக விரும்பவில்லை. கட்சி வேறு ஆட்சி வேறு என்ற கொள்கை அடிப்படையில் ஒரு மாற்று அரசியலை முன்னிறுத்தி திட்டம் தீட்டி வருகிறேன். இதை அனைத்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொருவருடைய பொறுப்பு” என்று அறிவித்தார். அதே நேரத்தில் நீங்கள்தான் முதலமைச்சர் என ரசிகர்கள் நம்பி இருக்கும் சூழலில் நீங்கள் முதல்வர் இல்லை என்று கூறுவதை அவர்கள் ஏற்பார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், ’அதனை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று தெரிவித்தார்.

அதேபோல யாரை முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள் முன்னிறுத்த வாய்ப்பு இருக்கிறது என்றும் யார் அந்த தகுதியான வேட்பாளர் தமிழருவி மணியன் ?அல்லது கமலுக்கா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பதிலளிக்கவில்லை. ஆனால், கமல்தான் அவரது முதல்வர் வேட்பாளர் என்று அரசியல் விமர்சகர்கள் கூறினர்.

இந்த நிலையில், “ரஜினி விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று அவருக்கு நெருக்கமான முன்னாள் சென்னை பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன் தெரிவித்தார். இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் சி.குமாரவேல் நேற்று ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், “ரஜினியும் கமலும் அரசியலிலும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களது விருப்பமாக உள்ளது. இதுவே மக்களின் விருப்பமாக உள்ளது. அவ்வாறு கமலும் ரஜினியும் இணைந்து தேர்தலை சந்தித்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளராக இருப்பார்.

காரணம், ஏற்கெனவே ரஜினி தனக்கு முதல்வராகும் ஆசையெல்லாம் இல்லை என்று சொல்லிவிட்டார். இருவரும் சேர்ந்தால் பெரிய மாற்றம் நிகழும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இது குமரவேலின் கருத்தா அல்லது குமரவேல் மூலம் கமல்ஹாசன் முன்வைக்கும் கருத்தா என்ற விவாதம் எழுந்துள்ளது. கடந்த ஜனவரியில் ரஜினி குறித்து பேசிய கமல், “ரஜினி பெருமை மிக்க தமிழன். அவரது எல்லா செயல்பாடுகளும் தமிழர்களுக்காகவே அமைய விரும்புகிறேன். அவரை சம்மதிக்க வைக்க தொடர்ந்து முயற்சி செய்வேன். ரஜினியின் மனநிலையும் அப்படித்தான் இருக்கிறது. திராவிட அரசியல் என்பது தமிழகத்தின் தேவையாக இருந்தது. இப்போது அது சிலரின் தேவையாக இருக்கிறது” என்று கூறியிருந்தார்.

கட்சி தொடங்கிய கமல் முழுமையான கட்டமைப்பு பலத்தை அமைக்க இன்னும் போராடி வருகிறார். ஆனால் ரஜினியோ, இன்னும் கட்சியே தொடங்காமல் ரஜினி மக்கள் மன்றம் என்ற கட்டமைப்பு பலத்தை ஓரளவு அமைத்துவிட்டார். இந்த நிலையில், ரஜினி கட்சி தொடங்கி கமலை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் ரஜினிக்கும் தான் அரசியலுக்கு வரத் தவறிவிட்டோம் என்ற குறை நீங்கும். கமலுக்கும் இது மிகப்பெரிய பலமாக இருக்கும் என்ற எண்ணம் மக்கள் நீதி மய்யம் தரப்பில் முன்வைக்கப்படுகிறது.

அரசியல் விமர்சகர்களோ, “கமல் ரஜினி ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் உண்மையிலேயே ஒன்றிணைந்தால், அது ஒரு புதிய வகையான அரசியல் வேகத்தை உருவாக்கக்கூடும். இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் மூன்றாவது சக்தி என்பது பலவீனமாக இருந்ததால், இரு திராவிடக் கட்சிகளும் இதுவரை போட்டு வந்த அரசியல் கணக்கை கமல் ரஜினியின் கூட்டணி உடைக்கும். இந்த இரண்டு நட்சத்திரங்களும் உண்மையில் கைகோத்தால், அவை திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக ஒரு கடுமையான சவாலை ஏற்படுத்தக்கூடும்”என்கின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக ரஜினியின் அரசியல் குறித்த செயல்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டிருக்கின்றன. இதனிடையே, கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் நோய் எதிர்ப்பு சக்திக்கான தீவிர பயிற்சிகளை ரஜினி மேற்கொண்டு வருகிறார். விரைவில் ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு அவரது மன்ற நிர்வாகிகள். 2021 சட்டமன்ற தேர்தலில் ரஜினி களமிறங்குவாரா? இல்லை பின் வாங்கி விடுவாரா? அல்லது கமல் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பாரா என்பதை பார்த்திருந்த பார்ப்போம். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews