சிவாஜிக்கு அடுத்து திரைத்துறையின் பொக்கிஷம் நடிகர் ரஜினிகாந்த்- கடம்பூர் ராஜூ

 

சிவாஜிக்கு அடுத்து திரைத்துறையின் பொக்கிஷம் நடிகர் ரஜினிகாந்த்- கடம்பூர் ராஜூ

அதிமுகவில் பிளவு என்பது எந்தக் காலத்திலும் நடைபெறப் போவதில்லை என அமைச்சர் கடம்பூர் செ ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ, “அதிமுக மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்றியுள்ளது. 2021ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் என்ற நிலையில் நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம், ‌ மக்கள்‌ மனநிலையும் அந்த நிலையில் தான் உள்ளது. தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் எழுச்சியுடன் வரவேற்பு கொடுக்கின்றனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த மாதம் 3,4 ஆகிய தேதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். விவசாயிகள் மீது முதல்வர் நன்மதிப்பு கொண்டவர் என்பதால் காவிரி டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தார். குடிமராமத்து திட்ட பணியின் காரணமாக இன்று அனைத்து பகுதிகளும் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. நீர் மேலாண்மையை பாதுகாப்பதில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. இதற்காக மத்திய அரசும் விருது வழங்கி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று கூறியிருப்பதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை.

சிவாஜிக்கு அடுத்து திரைத்துறையின் பொக்கிஷம் நடிகர் ரஜினிகாந்த்- கடம்பூர் ராஜூ

கொரோனா காலத்தில் உடல்நிலை காரணமாக ரஜினிகாந்த் வெளியே வரவில்லை. உடல்நிலை காரணமாக தான் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். நாங்களும் அதை தான் நினைக்கிறோம் அவர் நீடூடி வாழ வேண்டும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடுத்தபடியாக திரைத்துறையின் பொக்கிஷமாக நடிகர் ரஜினிகாந்த் உள்ளார். இந்திய அளவில் கலைத்துறையில் தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர். நடிகர் ரஜினிகாந்தின் ஆரோக்கியம் மற்றும் உடல்நிலை முக்கியம். நடிகர் ரஜினிகாந்த் நினைப்பதுபோல தான் எங்களுடைய எண்ணமும் இருக்கிறது. உடல்நிலை காரணமாக தான் முடிவு எடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார் அதைத்தாண்டி விமர்சனம் செய்வதற்கு வேறொன்றுமில்லை. அதிமுகவில் பிளவு என்பது எந்தக் காலத்திலும் நடக்கப்போவதில்லை.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் நடக்காமல் இருப்பதைதான் எப்போதும் பேசுவார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக ஆட்சி கலைந்து விடும், சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்காது, ‌ஆட்சி போய்விடும் என்று ஜோதிடம் சொல்வது மு.க.ஸ்டாலின் வழக்கம். ஏனென்றால் மு. க ஸ்டாலினுக்கு பதவி வெறி. காலச் சூழ்நிலை தான் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக உயர்த்தியது. தொண்டனாக இருந்து முதல்வராக முடியும் என்றால் அது அதிமுகவில் தான் சாத்தியம். ஆனால் திமுகவில் ஒரே குடும்பத்தினர் பரம்பரையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவி தேடி வந்தது. மு க ஸ்டாலின் முதல்வர் பதவி கனவில் இருக்கிறார். வாழ்நாள் முழுவதும் அவர் கனவு மட்டுமே காண முடியும். அதிமுக ஒரு காலமும் உடையாது. இருமுறை கட்சி உடைந்து சின்னத்தை மீட்ட இயக்கம் அதிமுக” எனக் கூறினார்.