“துரோகம் செய்கிறார்கள்; ரத்தம் கொதிக்கிறது” சொந்த கட்சியையே விமர்சிக்கும் ஜோதிமணி

 

“துரோகம் செய்கிறார்கள்; ரத்தம் கொதிக்கிறது” சொந்த கட்சியையே விமர்சிக்கும் ஜோதிமணி

நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத்துக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் காலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். இதேபோல் விளவங்கோடு தொகுதியில் விஜயதரணியை வேட்பாளராக களமிறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு காங்கிரஸ் கோஷ்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்னரே அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“துரோகம் செய்கிறார்கள்; ரத்தம் கொதிக்கிறது” சொந்த கட்சியையே விமர்சிக்கும் ஜோதிமணி

இந்நிலையில் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ள ஜோதிமணி எம்பி, “காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.

நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம். காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் இரத்தத்திலும், வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை.

எனது தலைவர் ராகுல்காந்தி பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம் பி கிடையாது. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.