பப்ஜி விளையாடியதை தாய் கண்டித்ததால், ஐடிஐ மாணவர் தற்கொலை…

 

பப்ஜி விளையாடியதை தாய் கண்டித்ததால், ஐடிஐ மாணவர் தற்கொலை…

கிருஷ்ணகிரி

ஓசூரில் பப்ஜி விளையாடியதை தாயார் கண்டித்ததால் ஐ.டி.ஐ மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவருக்கு விஷ்வா(18) மற்றும் ரவி(16) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். வாய்பேச முடியாத ஜெயலட்சுமி கணவர் உயிரிழந்ததால், கட்டிட வேலைக்கு சென்று மகன்களை வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ஐ.டி.ஐ படித்து வந்த ரவி, ஆன்லைன் வகுப்பு என கூறி நண்பர்களுடன் சேர்ந்து பப்ஜி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. பப்ஜி விளையாட்டை அரசு தடை செய்தபோதும், நாட்டின் பெயரை மாற்றி தொடரந்து விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

பப்ஜி விளையாடியதை தாய் கண்டித்ததால், ஐடிஐ மாணவர் தற்கொலை…

இதனால் ரவியை அவரது தயார் மற்றும் உறவினர்கள் கண்டித்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஜெயலட்சுமி வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அவர், அருகில் இருந்தவர்களை அழைத்து கதவை திறந்துள்ளார். அப்போது, வீட்டின் உள்ளே ரவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

இதனை கண்ட ஜெயலட்சுமி கதறி அழுதது, அனைவரையும் கண்கலங்க செய்தது. தகவல் அறிந்த ஓசூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.