கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் திராவிட கட்சிதானா?

 

கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் திராவிட கட்சிதானா?

’திராவிடக் கட்சிகளை வீட்டுக்கு அனுப்புவோம். கழகங்களின் 50 ஆண்டுகால ஆட்சிக்கு விடை கொடுப்போம். கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்பதான முழக்களை முன் வைக்கும் கட்சி பாரதிய ஜனதா கட்சி. (ஆனால், தற்போது அது கூட்டணி வைத்திருப்பதே ஒரு திராவிடக் கட்சியோடுதான்)

திராவிடக் கட்சிகளால்தான் தமிழகம் முன்னேற வில்லை. தமிழை அழித்தது திராவிடம் என்பது தமிழ்த்தேசியம் பேசும் சிலரின் அடிப்படைப் பார்வை. (இதில் மாறுபட்ட தமிழ்த்தேசிய வாதிகளும் அமைப்புகளும் உண்டு)

கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் திராவிட கட்சிதானா?

இருமுனைகளிலிருந்து திராவிடக் கட்சிகள் மீது தாக்குதல் நடந்துகொண்டிருக்கும்போது சமீபத்தில் ஆரம்பித்த தனது கட்சியும் திராவிடக் கட்சிதான் என்று சொல்வதற்கு தனி துணிச்சல் வேண்டும். ஆம். அப்படிச் சொல்லியிருப்பவர் கமல்ஹாசன். அவரின் மக்கள் நீதி மய்யம் திராவிடக் கட்சிதான் என்று கூறியிருக்கிறார். அது எந்தளவு உண்மை எனப் பார்ப்போம்.

திராவிடக் கட்சிகள் அனைத்துமே பெரியாரின் வழித்தோன்றலாக தம்மைக் குறிப்பிட்டுக்கொள்பவை. அதனால், மேடைகளில் பெரியாரின் படத்தைப் பயன்படுத்த தவறாது. ஆனால், கமல்ஹாசனின் எந்த அரசியல் மேடையிலும் பெரியாரின் படம் இடம்பெற வில்லை. இனியும் இடம்பெறுமா என்பது சந்தேகமே.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் திராவிட கட்சிதானா?

திராவிடக் கருத்தியலே ஆரிய எதிர்ப்பிலிருந்து உருவான ஒன்றுதான். அதனால்தான், திராவிடக் கருத்தியலைத் தூக்கிப்பிடிக்கும் கட்சிகள் ஆரிய எதிர்ப்பைக் கடைப்பிடிக்கும். ஆனால், கமல்ஹாசன் அப்படியேதும் தனது ஆரிய எதிர்ப்பை பதிவு செய்தது இல்லை. அதனால், அதன் கொள்கையிலும் அது இடம்பெறும் என்று எதிர்பார்க்க முடியாது.

திராவிடத்தைக் கடைப்பிடிக்கும் கட்சிகள் திராவிடர்களை அசுரனாக்கி அழித்த தினத்தைக் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதைத் தவிர்க்கும். அதிமுக தரப்பில் தொடக்கத்தில் தவிர்க்கப்பட்டாலும், பின்னாளில் கூறப்பட்டது. ஆனாலும், திராவிடக் கருத்தியலில் வாழ்த்து கூற மாட்டார்கள். ஆனால், கமல்ஹாசன் அப்படியேதும் வரையறை வைத்துக்கொள்வதில்லை.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் திராவிட கட்சிதானா?

திராவிடக் கட்சிகள் அதிமுக, திமுக இரண்டுமே தமிழகத்தை பெரியார் மண் என்பதை அடித்துச் சொல்லும். ஆனால், கமல்ஹாசன் அப்படித் தெளிவாகச் சொல்லியதில்லை. பெரியாரோடு, அவரின் கருத்தியலுக்கு எதிரானவர்களையும் இணைத்தே கமல் பேசியிருப்பதைப் பார்க்கமுடியும்.

இப்படிப் பட்டியலிட்டுக்கொண்டே செல்ல முடியும். ஆனாலும், கமல்ஹாசன் தனது கட்சியின் கொள்கையை வெளியிட்டால்தான் அவை எந்தளவு திராவிடக் கருத்தியலோடு ஒத்துப்போகிறது என்பதை மதிப்பிட முடியும். அதை எப்போது செய்யபோகிறாரோ கமல்?