தேங்காய் நல்லதா… கெட்டதா?

 

தேங்காய் நல்லதா… கெட்டதா?

தமிழகம் மற்றும் கேரளா உணவுகளில் தேங்காய்க்கு முக்கிய இடம் உள்ளது. இளநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய், தேங்காய்ப் பால் என பல விதங்களில் தேங்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தேங்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நுண் ஊட்டச்சத்துக்களைக் காட்டிலும் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. தேங்காயில் புரதம், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், நார்ச்சத்து உள்ளது. 100 கிராம் தேங்காயில் ஒரு நாள் தேவையில் 75 சதவிகித மாங்கனீசு, 22 சதவிகித தாமிரம், 14 செலீனியம், 13 சதவிகிதம் இரும்புச்சத்து உள்ளிட்டவை உள்ளது.

தேங்காய் நல்லதா… கெட்டதா?

தேங்காயை அதிக அளவில் சேர்த்துக்கொள்வது இதயத்துக்கு நல்லது இல்லை என்ற கருத்து உள்ளது. இதய, சர்க்கரை நோய் மருத்துவர்கள் தேங்காய் அளவைக் குறைத்துக்கொள்ளும்படியும் தவிர்க்கும் படியும் கூறுகின்றனர். இதற்கு காரணம் இதில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புதான் காரணம். தேங்காய் எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு எல்.டி.எல் என்ற கொழுப்பு அதிகரிப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் அதிக அளவில் உணவில் தேங்காய் சேர்த்துக்கொள்ளும் பாலிசினியன் தீவுகள் பகுதி மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இதய நோய் குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் அதிக அளவில் மீன் உணவை எடுத்துக்கொள்வதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸ் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அவர்களுக்கு நல்ல கொழுப்பு மட்டுமின்றி கெட்ட கொழுப்பும், டிரை கிளசரைடும் அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதனால் தேங்காய் நல்லதா கெட்டதா என்று உறுதியாக கூற முடியவில்லை என்று ஆய்வாளர்கள் நம்மை மேலும் குழப்புகின்றனர்.

தேங்காய் மிகக் குறைந்த கார்போஹைட்ரேட்டும் அதிக நார்ச்சத்தும் கொண்டது என்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். தேங்காயில் உள்ள அமினோ அமிலங்கள் கணையத்தில் உள்ள செற்களைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறது.

தேங்காயில் gallic acid, caffeic acid, salicylic acid, p-coumaric acid ஆகிய அமிலங்கள் அதிக அளவில் உள்ளன. இவை மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடண்டாக செயல்படுகின்றன. இதில் உள்ள பாலிஃபீனால்கள் எல்டிஎல் அளவைக் குறைத்து ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.