பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

 

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

திமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் இருவரும் பாஜகவுக்கு தாவியிருக்கும் நேரத்தில், இன்னும் பல திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேறுவார்கள் என்று கு.க.செல்வம் சவால் விடுத்திருக்கும் நிலையில் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என்று திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணனே விளக்கம் அளித்துள்ளார்.

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

இதுகுறித்த அவரது அறிக்கையில், ’’கடந்த சில நாட்களாக சில சமூக விரோதிகள் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் என்னை பற்றி அவதூறான செய்திகளில் பரப்பி வருகின்றனர். அந்த அற்பர்களுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் விசுவாசமிக்க தொண்டனாக கழகத் தலைவர் தளபதி தமிழகத்தின் முதலமைச்சர் ஆவதற்கு இதய சுத்தியோடு தீவிரமாக பணியாற்றி வருவதை கழகத் தலைவர் நன்கறிவார்.

ஆகையால் என்னை கழகத்திலிருந்தும், தலைவரிடமிருந்தும் எவராலும் பிரிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். இனியும் இதுபோன்று விஷமப் பிரச்சாரத்தில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.