#IPL2021: டெல்லியை வீழ்த்தி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது பெங்களூரு அணி!

 

#IPL2021: டெல்லியை வீழ்த்தி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது பெங்களூரு அணி!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகள் மோதின. இரு அணிகளும் 5 போட்டிகளில் விளையாடி தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. இதில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கின.

Image

பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கோலி மற்றும் தேவ்தட் படிக்கல் களமிறங்கினர். கோலி 12 ரன்களிலும்,படிக்கல் 17 ரன்களிலும் பவர்பிளேவில் ஆட்டமிழந்தனர்.அடுத்து வந்த மேக்ஸ்வெல் தன் பங்குக்கு 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார் .இதன்பின் ரஜத் படிதருடன் ஏபி டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடி வந்த இந்த கூட்டணியில் ரஜத் படித்தர் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் தனி ஒருவராக ஏபி டிவில்லியர்ஸ் டெல்லி அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 34 பந்துகளில் அரைசதம் கடந்த ஏபி டிவில்லியர்ஸ் , ஸ்டாய்னிஸின் கடைசி ஓவரில் 3 சிக்சர்கள் உட்பட 23 ரன்களை விளாசினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் டிவில்லியர்ஸ் 75 ரன்கள் குவித்தார்.20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது.

Image

இந்த சவாலான இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியாக தவான் 6 ரன்களிலும்,பிரித்திவி சா 21 ரன்களிலும்,ஸ்மித் 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து ஸ்டாய்னிஸ் தன் பங்குக்கு 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டம் பெங்களூர் பக்கம் செல்ல,இதன் பிறகு வந்த சிம்ரன் ஹெட்மயர் மிகவும் அதிரடியாக ஆடினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 4 சிக்சர்களுடன் 23 பந்துகளில் அரை சதம் அடித்தார். கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அற்புதமான பந்துவீசிய சிராஜ் முதல் 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி பந்தில் 6 ரன் தேவைப்பட்ட நிலையில் பவுண்டரி அடிக்க , பெங்களூர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ரிஷப் பண்ட் 58 ரன்களுடனும் ஹெட்மயர் 53 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தும் டெல்லி அணி தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியது.