ஐபிஎல்: பெங்களூரு அணியை வாரி சுருட்டிய டெல்லி அணி!

 

ஐபிஎல்: பெங்களூரு அணியை வாரி சுருட்டிய டெல்லி அணி!

ஐபிஎல் கிரிக்கெட்டின் 55வது ஆட்டத்தில் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும்,விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்து தகுதிச்சுற்று போட்டி ஒன்றுக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கின.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக படிக்கல் மற்றும் பிலிப் களமிறங்கினர். பிலிப் 12 ரன்களிலும்,அடுத்து வந்த கேப்டன் கோலி 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு படிக்கல் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தனர். நிதானமாக ஆடிய படிக்கல் 50 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிகட்டத்தில் அதிரடியாக ஆடிய ஏபி டிவில்லியர்ஸ் 37 ரன்களிலும், சிவம் டுபே 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல்: பெங்களூரு அணியை வாரி சுருட்டிய டெல்லி அணி!

153 என்ற இலக்குடன் தனது இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணியிலிருந்து தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ப்ரிதிவ் ஷா களமிறங்கினர். ப்ரிதிவ் ஷா 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து தவான் மற்றும் ரஹானே ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.19 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி தகுதிச்சுற்று போட்டி ஒன்றுக்கு தகுதி பெற்றது. தோல்வியடைந்த பெங்களூர் அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பதால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின் வெற்றி தோல்வியை பொறுத்து கொல்கத்தா அல்லது ஹைதராபாத் ஆகிய இரண்டு அணிகளில் ஒரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.