உளவுத்துறை எச்சரிக்கை! தீவிர ரோந்து பணியில் 5 கப்பல்கள்!

 

உளவுத்துறை எச்சரிக்கை! தீவிர ரோந்து பணியில் 5 கப்பல்கள்!

ராமேஸ்வரத்திற்கு மிக அருகில் இலங்கை இருப்பதால், கடல் வழியாக கடத்தல்காரர்களும், மர்மநபர்களும் ஊடுருவ வாய்ப்புள்ளதாக, உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடத்தல்காரர்களும், மர்மநபர்களும் மீனவர்கள் போர்வையில் ஊடுருற வாயுப்பு இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, ராமேஸ்வரம் கடல்பகுதியில் கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று ராமேஸ்வரம் முதல் தொண்டிக்கு இடைப்பட்ட இந்திய கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மண்டபத்திலுள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான இரண்டு அதிவேக கப்பல்களும், இரண்டு ஹோவர் கிராப்ட் கப்பல்களும் மண்டபம் முதல் ராமேஸ்வரம், தனுஷ்கோடி வரையிலும் கடல் பகுதியில் இரவு பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

மண்டபம் முதல் ராமேஸ்வரம் வரையிலான கடல் பகுதியில் நாட்டு படகுகளில் மீன் பிடித்த மீனவர்களிடம் சந்தேகப்படும்படியான நபர்களையோ, படகுகளையோ கண்டால் உடனடியாக இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உச்சிப்புளி பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து, இந்திய கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று ராமேசுவரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் மிகவும் தாழ்வாக பறந்தபடி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.