அரைசதம் அடித்த பின் பட்டாசாக வெடித்த பண்ட்… இந்திய அணி மீண்டது!

 

அரைசதம் அடித்த பின் பட்டாசாக வெடித்த பண்ட்… இந்திய அணி மீண்டது!

பரபரப்பான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றுவருகிறது. இங்கிலாந்தை விட இந்தியாவுக்கு இப்போட்டி முக்கியமானது என்பதால் பொறுப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருக்கிறது. கடந்த முறை போல் அல்லாமல் இம்முறை ஒருசில வீரர்கள் நிலைத்து நின்று ஆடிவருகின்றனர். அதில் பண்ட், ரோஹித் சர்மா முக்கியமானவர்கள். டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வுசெய்த இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிர்ச்சி மட்டுமே பரிசாகக் கிடைத்தது.

Image

அக்சர் புயல் இங்கிலாந்தை ஆட்டிப்படைத்தது. ஸ்டோக்ஸ், லாரன்ஸை தவிர்த்து யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முடிவில் 205 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அடுத்து ஆடவந்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியைக் கொடுத்தார் சுப்மன் கில். முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்தியாவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. புஜாரா 17 ரன்களில் வெளியேற கோலி டக்அவுட்டாகி ஏமாற்றினார்.

Image

ரோஹித் சர்மா மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவரும் 49 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இக்கட்டான சூழலில் சிக்கித்தவித்த இந்தியாவை பண்டும் சுந்தரும் மீட்டெடுத்தனர். அரைசதம் அடிக்க 82 பந்துகள் எடுத்துக்கொண்ட பண்ட், அடுத்த 30 பந்துகளில் தன்னுடைய வழக்கமான கதக்களி ஆடி சதத்தைப் பூர்த்திசெய்தார். அடுத்தே அவர் அவுட்டாகினாலும் இந்தியா தற்போது நல்ல நிலையில் தான் இருக்கிறது. சுந்தருடன் அக்சர் கைகோத்துள்ளார். தற்போது 272 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. 67 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.