மீண்டும் சுழல் புயல் மையம் கொண்டது – இங்கிலாந்து சிக்கி சின்னாபின்னமானது!

 

மீண்டும் சுழல் புயல் மையம் கொண்டது – இங்கிலாந்து சிக்கி சின்னாபின்னமானது!

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையேயான நான்காவது மற்றும் கடைசி போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றுவருகிறது. ஆடுகள சர்ச்சைக்குப் பின் மாற்றியமைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இருந்தாலும் ஆடுகளம் ஸ்பின்னுக்கு தான் ஒத்துழைத்துவருகிறது. இங்கிலாந்தை விட இந்தியாவுக்கே அதிக முக்கியவத்துவம் வாய்ந்தது. இப்போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்ய வேண்டும். அப்போது தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியுஸிலாந்துடன் மோத முடியும்.

Image

வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் டாஸ் போட சென்ற கோலிக்கு தோல்வியே கிடைத்தது. இது ஒன்றும் புதிதல்ல. இரண்டாவது போட்டியைத் தவிர்த்து அனைத்திலும் டாஸில் கோலி தோற்றிருக்கிறார். இந்த முறையும் டாஸில் வெற்றிபெற்ற ரூட் பேட்டிங்கை தேர்வுசெய்தார். இந்த முறையாவது ஆடுகளம் பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும் என எதிர்பார்த்த இங்கிலாந்து வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வழக்கம் போலவே அக்சர் புயல் வீச ஆரம்பித்துவிட்டது. அதனால் ஆட்டம் இந்தியாவுக்குச் சாதகமானதாக மாறியது.

Image

தொடக்க ஆட்டக்காரர்கள் சிப்லேவையும் கிராலியையும் அடுத்தடுத்து அக்சர் காலி செய்தார். எல்பிடபிள்யூவில் ரூட்டை நடையைக் கட்டவைத்தார் பும்ராவுக்குப் பதில் உள்ளே வந்த சிராஜ். ஸ்டோக்ஸும் பெயர்ஸ்டோவும் கொஞ்ச நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து நம்பிக்கை அளித்தார்கள். அந்த நம்பிக்கையைக் கொஞ்ச நேரம் கூட சிராஜ் நீடிக்கவிடவில்லை. பெயர்ஸ்டோவை காலி செய்து அனுப்பினார். பென் ஸ்டோக்ஸ் அரைசதம் கடந்து சுந்தரிடம் வீழ்ந்தார். அதுவரையில் விக்கெட் கணக்கைத் தொடங்காத அஸ்வின் ஓலி போப்பையும் போக்ஸையும் அடுத்தடுத்து தூக்கி அதிர்ச்சி கொடுத்தார்.

Image

46 ரன்களில் லாரன்ஸை பண்ட் ஸ்டம்பிங் செய்ய, பெஸ்ஸை அக்சர் வெளியில் அனுப்பிவைத்தார். முடிவில் ஜாக் லீச்சை அஸ்வின் தூக்க இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 205 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்திய தரப்பில் அக்சர் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். சிராக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.