இங்கிலாந்தை கதறவிட்ட அஸ்வின்-அக்சர் சுழல் கூட்டணி… இந்தியா ஹேப்பி அண்ணாச்சி!

 

இங்கிலாந்தை கதறவிட்ட அஸ்வின்-அக்சர் சுழல் கூட்டணி… இந்தியா ஹேப்பி அண்ணாச்சி!

இந்தியா-இங்கிலாந்து இடையிலான மூன்றாவது போட்டி மிகவும் சிறப்புவாய்ந்த ஒன்று. உலகிலேயே மிகப்பெரிய மைதானமான மொடேரா மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி. தற்போது நரேந்திர மோடி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இஷாந்த் சர்மாவின் 100ஆவது டெஸ்ட் போட்டி. மிக முக்கியமாக இரு அணிகளும் அதிகம் பரிட்சயப்படாத பிங்க் நிறப் பந்தில் பகலிரவு ஆட்டம். இது போதாதா இந்தப் போட்டியைச் சிறப்புவாய்ந்ததாக மாற்றுவதற்கு.

Image

பிங்க் நிறப் பந்துகளைக் கணிப்பது பேட்ஸ்மேன்களுக்கு கடினமான ஒன்று. பகலிரவு ஆட்டம் வேறு என்பதால் நிச்சயம் பேட்ஸ்மேன்களுக்குச் சவால் நிறைந்த போட்டியாகவே அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே ஆட்டத்தின் போக்கும் போய்க்கொண்டிருக்கிறது. அதேசமயம் இதுவரை மொடேரா ஃபிட்ச்சில் இன்னும் போட்டிகள் ஆடாததால் இரு அணிகளுக்குமே அது ஸ்பின்னுக்கு சாதகமாக இருக்குமா அல்லது வேகத்திற்குச் சாதகமாக இருக்குமா என்று தெரியாது.

Image

இப்படியான பல்வேறு விடை தெரியாத கேள்விகளுடனே டாஸ் போட சென்றனர் விராட் கோலியும் ஜோ ரூட்டும். வழக்கம் போல டாஸில் கோலி கோட்டையை விட, ஜெயித்து ரூட் பேட்டிங்கை தேர்வுசெய்தார். கோலி ஜெயித்திருந்தாலும் அதே தான் செய்திருப்பார். ஆனால் இப்போது அந்த முடிவை மறுபரிசீலனை செய்திருப்பார் என்பது ஒரு சிறிய அனுமானம். அந்த அளவிற்கு ஃபிட்ச் பவுலிங்குக்கு உக்கிரமாக இருக்கிறது. குறிப்பாக ஸ்பின் அட்டாக்கிற்கு. அக்சரும் அஸ்வினும் மீண்டும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை வாட்டி வதைத்துவருகின்றனர்.

Image

தொடக்க வீரர் கிராலியின் அரைசதம் தவிர்த்து எவருமே உருப்படியான ரன் அடிக்கவில்லை. இதில் பரிதாபம் என்னவென்றால் சிப்லேவும் பெயர்ஸ்டோவும் ரன் எடுக்காமலே வீழ்ந்தனர். பெரும் தலைவலி ஜோ ரூட் மீது ஏற்றிவைக்கப்பட்டது. ஆனால் அவர் இறக்கிவைத்தார். இல்லை அஸ்வினால் இறக்கிவைக்கப்பட்டார். ரூட் போன போதே ஆட்டத்தின் முடிவு தெரிந்துவிட்டது. இப்போது வரை விழுந்த ஆறு விக்கெட்டுகளில் நான்கு விக்கெட்டுகள் எல்பிடபிள்யூ விக்கெட்டாகவே அமைந்திருக்கின்றன.

Image

இப்போது அணிக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை பென் போக்ஸ் மட்டுமே. அவர் சென்னை ஃபிட்ச்சில் ஸ்பின்னை சமாளித்து ஓரளவு திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல இப்போட்டியிலும் மாயஜாலம் நிகழ்த்தி இங்கிலாந்தை மீட்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதற்கு மறுமுனையில் இருக்கும் டெய்லென்டர்கள் ஒத்துழைக்க வேண்டும். தற்போது அவருடன் ஜாக் லீச் இணைந்து ஆடிவருகிறார். இப்போதைய நிலவரப்படி 93 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறிவருகிறது.