மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவசர ஆலோசனை..

 
மன்சுக் மாண்டவியா

கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து அனைத்து மாநில சுகதாரத் துறை அமைச்சர்களுடன் , நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியா  கொரோனா மற்றும் ஒமைக்ரானின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறது.  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1.50 லட்சத்தை தாண்டியிருக்கிறது.  நாடு முழுவதும் 1 மாவட்டங்களில் 3,600 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களுக்கு அறிவுறுத்தியது.

ஒமைக்ரான்

அதன்படி நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில்  இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட,  பொழுதுபோக்கு தலங்களில் 50 % பயனாளர்களுக்கு அனுமதி, பள்ளிகளுக்கு விடுமுறை போன்ற கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  இருந்தபோதிலும் வைரஸ் பரவல் குறைந்தபாடில்லை.. இந்நிலையில் வைரஸ் பரவல் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து நாளை மத்திய சுகாதாரத்துறை  அமைச்சர் மன்சுக் மாணடவியா , அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நாளை காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

தமிழ்நாடு சார்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சூப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பு,  தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.