தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்திய மருத்துவர்கள்… கண்டு கொள்ளாமல் பயணம் செய்த உமா பாரதி

 

தனிமைப்படுத்தி  கொள்ளும்படி அறிவுறுத்திய மருத்துவர்கள்… கண்டு கொள்ளாமல் பயணம் செய்த உமா பாரதி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை சந்தித்ததால் தனிமையில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியபின்பும், பா.ஜ.க.வின் முன்னாள் துணை தலைவர் உமா பாரதி பயணம் மேற்கொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பா.ஜ.க.வின் முன்னாள் துணை தலைவரும், மத்திய அமைச்சருமான உமா பாரதி கடந்த வார திங்கட்கிழமையன்று உத்தரகாண்ட் மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் தன் சிங் ராவத்தை சந்தித்து பேசினார். தன் சிங் ராவத்துக்கு கடந்த புதன்கிழமையன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதனையடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை சந்தித்து இருந்ததால் சில நாட்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என உமா பாரதிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

தனிமைப்படுத்தி  கொள்ளும்படி அறிவுறுத்திய மருத்துவர்கள்… கண்டு கொள்ளாமல் பயணம் செய்த உமா பாரதி
தன் சிங் ராவத்

ஆனால் உமா பாரதி அதனை கண்டு கொள்ளாமல் தனது பயணத்தை தொடர்ந்தார். மேலும் கடந்த வியாழக்கிழமையன்று பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதற்கு அடுத்த நாளில் கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரிந்ததால் கடந்த சனிக்கிழமையன்று உமா பாரதி தானாக முன்வந்து கொரோனா வைரஸ் பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.

தனிமைப்படுத்தி  கொள்ளும்படி அறிவுறுத்திய மருத்துவர்கள்… கண்டு கொள்ளாமல் பயணம் செய்த உமா பாரதி
பத்ரிநாத் கோயில்

இதனையடுத்து உமா பாரதி டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், ஹிரித்துவார் மற்றும் ரிஷிகேஷுக்கு இடையே உள்ள ஆசிரமத்தில் தனிமைப்படுத்தலில் இருக்க போகிறேன் என பதிவு செய்து இருந்தார். கொரோனா வைரஸ் உள்ள நபரை சந்தித்ததால் பயணம் செய்யக்கூடாது தனிமையில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியும் அதனை கண்டுகொள்ளாமல் தனது பயணத்தை உமா பாரதி தொடர்ந்தது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் நேற்று ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உமா பாரதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.