பெண்ணை அடித்துக் கொன்ற புலி! கேரளாவில் அதிர்ச்சி

கேரள மாநிலம் வயநாட்டில் மாணந்தவாடி பகுதியில் எஸ்டேட்டில் காபி பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆதிவாசி பழங்குடியின பெண்ணை புலி அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மானந்தவாடி பகுதியில் ராதா என்ற பெண் காபி எஸ்டேட்டில் காப்பி பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு மறைந்து இருந்த புலி அவரைத் தாக்கி கொன்றது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், இறந்த பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சித்தபோது அங்கிருந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ராதா என்ற பெண்ணை கொன்றுள்ள புலி மீண்டும் இந்த பகுதிக்கு வர வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புலியை சுட்டுக் கொல்ல உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதேபோல உயிரிழந்த பெண்ணிற்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து இறந்த பெண்ணின் உடலை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.
உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் புலியை சுட்டுக் கொல்ல முடிவெடுக்கப்பட்டது. அதேபோல உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடாக 11 லட்சம் ரூபாய் பணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இதைத் தொடர்ந்து உயிரிழந்த ராதாவின் உடலை மருத்துவக் கூறு பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல பொதுமக்கள் அனுமதி அளித்தனர். எஸ்டேட்டில் பணிபுரிய சென்ற ஆதிவாசி பழங்குடியின பெண்ணை புலி தாக்கிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.