ஹரியானாவில் கடும் இழுபறி..!! ஆட்சியை பிடிக்கப்போவது யார்??
ஹரியானாவில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்.8) காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், முதல் அரை மணி நேரம் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கைக்காக மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி பங்கஜ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஹரியானாவில் 3வது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜக இருந்தாலும், வாக்கு எண்ணிக்கை ஆரம்ப நிலவரத்தின்படி காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. ஹரியானாவில் ஜூலான் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் முன்னிலை வகிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 60 தொகுதிகளிலும், பாஜக 27 தொகுதிகளிலும், மற்றவை 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்த நிலையில், தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை வகிப்பது அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் பிற்பகலில் முழுமையாக தெரியவரும் என்றாலும், தற்போது காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.