சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் ஹலால் பொருள்?.. சர்ச்சையில் சிக்கிய திருவாங்கூர் தேவஸ்தானம்

 
அப்பம், அரவணை

சபரிமலை ஐயப்பன் கோயிலில்  பிரசாதம் தயாரிப்பதில் ஹலால் சான்றளிக்கப்பட்ட வெல்லத்தை பயன்படுத்தப்பட்டது என்று குற்றச்சாட்டை திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியம் மறுத்துள்ளது.

கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகம் முழுவதும் பிரசித்து பெற்றது. இந்த கோயிலை திருவாங்கூர் தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அப்பம் மற்றும் அரவணை ஆகிய 2 பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த இரண்டு பிரசாதங்களும் அரிசி மற்றும் வெல்லம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சபரிமலை சீசன் காலத்தில் கோயிலின் மொத்த வருவாயில் 50 சதவீதத்துக்கு மேல் இந்த பிரசாதங்கள் வாயிலாக கிடைக்கிறது. தற்போது இந்த பிரசாதங்கள் தொடர்பாக  சர்ச்சை எழுந்துள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயில்

இந்த பிரசாதங்கள் தயாரிக்க திருவாங்கூர் தேவஸ்தானம் ஹலால் சான்றளிக்கப்பட்ட உள்ள வெல்லம் பயன்படுத்தப்படுவதாக கேரள உயர் நீதிமன்றத்தில் இந்து அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது. சபரிமலை நடவடிக்கை குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜே.ஆர். குமார் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கூறியிருப்பதாவது: கோயில் நிர்வாகங்களை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியம் சபரிமலையில் பிரசாதம் தயாரிப்பதில் ஹலால் சான்றளிக்கப்பட்ட வெல்லத்தை பயன்படுத்தி வந்தது. மற்றொரு மதத்தின் சடங்குகள் மற்றும் மதப் பழக்கங்களை பின்பற்றி தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை அதன் சான்றிதழுடன், சொந்த சடங்குகள் மற்றும் பழக்க வழக்கங்களை கொண்ட ஒரு இந்து கோயிலில் பிரசாதம் தயாரிப்பதற்கான உணவு பொருளாக ஏற்றுக் கொள்ளப்படுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்து இருந்தார்.

கேரள உயர் நீதிமன்றம்

இதனையடுத்து இது தொடர்பாக பதில் அளிக்கும்படி, திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியத்துக்கு கேரள உயர் நீதிமன்றம் பதில் அளித்தது. திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியம் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரரின் குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் யாத்திரை காலத்தில் பிரசாதம் விற்பனைக்கு இடையூறு விளைவிப்பதற்காக  தீங்கிழைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது.  வெல்லம் மூட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள ஹலால் என்ற அரபி சொல்லுக்கு ஆங்கிலத்தில் அனுமதிக்கத்தக்கது என்று பொருள். சபரிமலைக்கு சப்ளை செய்யும் சரக்கு நிறுவனம் அரபு நாடுகளுக்கும் வெல்லத்தை ஏற்றுமதி செய்தததால் இது ஏற்பட்டுள்ளது, அங்கு (அரபு நாடுகள்) இஸ்லாமிய விதிகளின்படி ஹலால் உணவுகளை விற்பனை செய்வதை விதிகள் கட்டாயமாக்குகின்றன என்று தெரிவித்துள்ளது.

திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியம்

2018ல் மகாராஷ்டிராவை சேர்ந் நிறுவனம் சபரிமலைக்கு வெல்லம் சப்ளை செய்தது. அந்த நிறுவனம் வெல்லம் ஏற்றுமதியில் ஈடுபட்டு வந்தது. இந்த ஏற்றுமதி பைகளில் ஹலால் சான்றிதழ்  குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பைகள் தரம் குறைந்ததாக காணப்பட்டதால், கோயில் அந்த விநியோகத்தை பயன்படுத்தவில்லை. குற்றச்சாட்டு ஆதாரமற்றது, இந்த பிரச்சாரத்துக்கு எதிராக நாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்போம் என்று திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தின் தலைவர்  கே ஆனந்தகோபன் தெரிவித்தார்.