2வது டோஸ் தடுப்பூசி போடவில்லையா? பஸ்ல ஏறாதீங்க.. பொது இடங்களுக்கு வராதீங்க.. சூரத் மாநகராட்சி அதிரடி

 
பி.ஆர்.டி.எஸ். பஸ்

சூரத்தில் தவணை காலம் முடிந்த பிறகும் 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பஸ்களில் பயணிக்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு வர அம்மாநகராட்சி தடை விதித்துள்ளது.

நம் நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருவதை இதற்கு முக்கிய காரணம். தற்சமயம் சுமார் 112 கோடி பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். 

சூரத் நகரம்

அதேசமயம் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 2வது தடுப்பூசி போடுவதற்கான தவணை காலம் முடிவடைந்தபிறகும் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மிகவும் அசட்டையாக உள்ளனர். குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சியில் 2வது டோஸ் தடுப்பூசி போடுவதற்கான தவணை காலம் முடிந்தும் தடுப்பூசி போடாமல் சுமார் 6.68 லட்சம் பேர் உள்ளனர்.

தடுப்பூசி செலுத்துதல்

இந்நிலையில் தவணை காலம் முடிந்தும் 2வது டோஸ் தடுப்பூசி போட நபர்களை தடுப்பூசி போட வைக்க சூரத் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தவணை காலம் முடிந்தும் 2வது டோஸ் தடுப்பூசி போடாதவர்கள்  பி.ஆர்.டி.எஸ். பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி கிடையாது, பூங்காக்கள்,  வன உயிரியல் பூங்கா போன்ற பொது இடங்களுக்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சூரத் மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.