திருப்பதியில் சொர்க்கவாசல் அடைப்பு- 10 நாட்களில் 6.80 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

 
திருப்பதி சொர்க்கவாசல் திறப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 10-ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த சொர்க்க வாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்தால் வைகுண்டத்தில் உள்ள மகாவிஷ்ணுவை தரிசனம் செய்த பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே இதில் சுவாமி தரிசனம் செய்வதை பக்தர்கள் தங்களுக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகின்றனர். இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 1.20 லட்சம் டிக்கெட்டுகளை வெளியிடப்பட்டது. இந்த டிக்கெட்களை பக்தர்கள் 20 நிமிடங்களில் முன்பதிவு செய்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

திருப்பதி சொர்க்கவாசல் திறப்பு... பக்தர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

இதே போன்று திருப்பதியில் இலவச சர்வதரிசன டோக்கன்கள் 10 நாட்களுக்கு 5 லட்சம் வரை பக்தர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இது தவிர அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள், மாநில முதல்வர், அமைச்சர்கள், எம் பி, எம் எல் ஏக்கள், தேவஸ்தான ஊழியர்கள், போலீசார் சிபாரிசு கடிதங்களின் மூலம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன்படி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி திறக்கப்பட்ட சொற்கவாசல் வழியாக 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பத்து நாட்கள் நிறைவடைந்ததை ஒட்டி  இரவு 11.50 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு பின்னர்  சொர்க்க வாசல் மூடப்பட்டு ஏகாந்த சேவை நடைபெற்றது. இன்று முதல் வழக்கம்போல் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமலை உள்ளிட்ட நித்திய பூஜைகள் செய்யப்பட்டு இலவச தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களை வைகுண்டம் காம்ப்ளக்ஸ் வழியாக அனுமதித்து இன்று காலை முதல் பக்தர்கள் மூலவர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 

கடந்த 10-ஆம் தேதி முதல் 10 நாட்களில் 6 லட்சத்து 82 ஆயிரத்து 478 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 1 லட்சத்து 60 ஆயிரத்து 506 பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக மொட்டையடித்து தலை முடியை காணிக்கையாக செலுத்தினர். ஏழுமலையானை  தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில்  ரூ.30.75  கோடி காணிக்கையாக செலுத்தியிருந்தனர் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி ஒட்டி சொர்க்கவாசல் வழியாக 6.43 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ.40.18 கோடி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இந்த ஆண்டு 6.80 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தாலும் உண்டியல் காணிக்கை ரூ.30.75 கோடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு  டிசம்பர் 30-ம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று  மீண்டும் சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கான டோக்கன் வெளியிட்ட போது கூட்டம் நெரிசல் ஏற்பட்டு ஆறு பக்தர்கள் இறந்ததோடு 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு வைகுண்ட ஏகாதசி, துவாதசி ஆகிய இரண்டு தினங்கள் மட்டுமே சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏழுமலையான் கோயிலில் ஆரம்ப காலத்தில் இருந்து தொன்று தொட்டு வரும் பழக்கம். ஆனால் கடந்த ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் 10 நாட்களாக இதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. எந்த காரணத்திற்காக அவ்வாறு செய்யப்பட்டது என்று தெரியவில்லை. எனவே ஆகம ஆலோசகர்களுடன் அறங்காவலர் குழு  ஆலோசித்து இரண்டு நாள் மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டால் போதுமா என்று  முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து அடுத்த வைகுண்ட ஏகாதசிக்கு 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறக்கப்படாமல் இரண்டு நாட்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இரண்டு நாட்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டால் டிசம்பர் 30 , 31 ஆகிய இரண்டு தினங்கள் மட்டும் இந்த ஆண்டு  சொர்க்கவாசல் வழியாக மீண்டும் அனுமதிக்கப்படும் அல்லது தற்பொழுது உள்ளது படியே 10 நாட்களுக்கு அனுமதிக்கப்பட்டால் டிசம்பர் 30-ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.