மனைவிக்கு வீட்டுமனை ஒதுக்கிய சித்தராமையா?- 5 பேர் மீது வழக்குப்பதிவு
மூடா மாற்று நில முறைகேடு விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா மீது மைசூரு லோக்ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மைசூரு மாநகர வளர்ச்சிக் குழுமம் (மூடா) முதல்வர் சித்தராமையாவின் மனைவியின் பெயரில் இருந்த நிலத்தை கையகப்படுத்தியதற்காக மாற்று நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. கையகப்படுத்திய நிலத்திற்கு பதிலாக, மைசூரு நகரின் முக்கிய பகுதியில் அதிகமான மதிப்பு கொண்ட நிலம் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு ஒதுக்கி கொடுக்கப்பட்டதால் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஆளுநரிடம் டி.ஜே.ஆபிரகாம் உள்ளிட்ட 3 சமூக ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில், முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அதை எதிர்த்து முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், முதல்வர் சித்தராமையாவிடம் விசாரணை நடத்த அனுமதியளித்தது.
முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி மைசூருவை சேர்ந்த சினேகமாயி கிருஷ்ணா, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், முதல்வர் சித்தராமையாவை மைசூரு லோக்ஆயுக்தா போலீஸ் விசாரிக்குமாறு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சிஆர்பிசி 156 (3) பிரிவின் கீழ் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சிஆர்பிசி பிரிவு 173ன் படி, 3 மாதத்திற்குள் விசாரணையை முடித்து, விசாரணை அறிக்கையை டிசம்பர் 24ம் தேதி சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் லோக்ஆயுக்தா போலீசார் முதல்வர் சித்தராமையா மீது இன்று எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி, முதல்வர் சித்தராமையா மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது. முதல்வர் சித்தராமையா மீது ஐபிசி 120பி, 166, 403, 420, 426, 465, 468, 340 மற்றும் 351 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சித்தராமையா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சித்தராமையாவின் மனைவி பார்வதி 2வது குற்றவாளியாகவும், சித்தராமையாவின் மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி 3வது குற்றவாளியாகவும், நிலத்தை விற்ற தேவராஜு 4வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல்வருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பாஜக கட்சியினர் வலியுறுத்த துவங்கி உள்ளனர். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் நான் ராஜினாமா செய்யும் பேச்சிற்கு இடம் கிடையாது என்று முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கர்நாடக உயர் நதிமன்றம் கொடுத்த உத்தரவிற்கு எதிராக முதல்வர் சித்தராமையா நாளை அல்லது திங்கட்கிழமை மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உளளது.