செப். 15 வரை இணைய சேவை துண்டிப்பு!
மணிப்பூரில் நிலவிவரும் சூழல் குறித்து தவறான தகவல்களும், புரளிகளும் சமூக வலைதளங்கள் மூலமாக பகிரப்பட்டு வருவதால், அவற்றைத் தடுக்கும் வகையில் இணைய சேவை நிறுத்திவைக்கப்படுவதாக மணிப்பூர் அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மணிப்பூர் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மணிப்பூரின் அமைதி சீர்குலைவதைத் தடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு சேவைகள் தற்காலிகத் தடை சட்டத்தின்படி, இணைய சேவைகள், செல்போன் சேவைகள் உள்ளிட்டவை செப். 10 மாலை 3 மணி முதல் செப். 15 மாலை 3 மணி வரை நிறுத்திவைக்கப்படுகிறது. உயிரிழப்பு அபாயம் குறித்தும், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவது குறித்தும், மக்களுக்கு இடையூறு ஏற்படுவது குறித்தும் சமூக வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக தவறான தகவல்கள், பொய் புரளிகள் பரப்பப்படுவதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மணிப்பூர் தலைநகர் இம்பால் மேற்கு மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் அண்மையில் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் மீண்டும் மணிப்பூரில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க முன்னெச்சரிக்கையாக, ட்ரோன்-எதிர்ப்பு அமைப்புகளை மணிப்பூரில் நிறுவி, அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ட்ரோன்-எதிர்ப்பு துப்பாக்கிகள் மாநிலத்துக்கு வரவழைக்கப்பட்டு, மத்திய ரிசர்வ் காவல் படை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட கலவரத்தால் 3 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் இணைய சேவையையும் மணிப்பூர் அரசு துண்டித்துள்ளது. துப்பாக்கி மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது ட்ரோன்கள் மூலமாக வெடிகுண்டுகள் வீசப்பட்டும் தாக்குதல் நடப்பது மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.