திருப்பதி கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்
திருப்பதி வைகுண்ட ஏகாதசி இலவச தரிசன டோக்கன் பெற ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்ந நிலையில், இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் அனிதா கூறியுள்ளார்.
திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி ஒட்டி நாளை (10-ம் தேதி ) சொர்க்கவாசல் திறக்கப்பட்டு 19-ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஆன்லைனில் 1.20 லட்சம் ரூ.300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசனத்தில் நேரடியாக வரும் பக்தர்களுக்கு நீண்ட நேரம் காத்திருப்பது மற்றும் கூட்ட நெரிசலை தடுக்க திருப்பதியில் எட்டு இடங்களிலும் திருமலையில் ஒரு இடத்தில் இன்று காலை 5 மணிக்கு இலவச டோக்கன்கள் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்தது. இந்த டோக்கன்களை பெறுவதற்காக நேற்று மதியம் டோக்கன் வழங்கும் கவுன்டர்கள் முன்பு பக்தர்கள் திரண்டனர்.
இந்நிலையில் இரவு 8 மணி அளவில் கவுண்டர் உள்ள வரிசையில் ஒரு சில பக்தர்களை டி.எஸ்.பி. ஒருவர் அனுமதிக்க உள்ளே விட்டுள்ளார். இதனால் ஒரே நேரத்தில் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயன்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர், காயம் அடைந்தவர்களை உடனடியாக ஆம்புலன்சில் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி விசாகப்பட்டினத்தை சேர்ந்த ரஜினி, சாந்தி, சேலத்தை சேர்ந்த மல்லிகா, நரசிப்பட்டினம் சேர்ந்த நாயுடுபாபு, ராஜேஸ்வரி உள்ளிட்ட 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் நாற்பது பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பதி கூட்ட நெரிசலில் இறந்த குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும் ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் அனிதா அறிவித்துள்ளார். இது முற்றிலும் துரதிஷ்டவசமான விபத்து, எனவே எதிர்க்கட்சினரும் பொதுமக்களும் இதனை புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறிய அமைச்சர் அனிதா, அனைத்து இடங்களிலும் சிசிடிவி காட்சிகள் உள்ளது, எனவே இந்த விபத்தில் யாராவது அலட்சியமாக செயல்பட்டதால் ஏற்பட்டதாக இருந்தால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.