வெறும் 2 பல்புகள், டிவி மட்டுமே – கேரளா தினக்கூலி தொழிலாளி வீட்டுக்கு ரூ.11,359 மின் கட்டணம்

 

வெறும் 2 பல்புகள், டிவி மட்டுமே – கேரளா தினக்கூலி தொழிலாளி வீட்டுக்கு ரூ.11,359 மின் கட்டணம்

ராஜக்காடு: வெறும் 2 பல்புகள், டிவி மட்டுமே கொண்ட கேரளா தினக்கூலி தொழிலாளி வீட்டுக்கு ரூ.11,359 மின் கட்டணம் குறிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் ராஜக்காடு பகுதியை சேர்ந்த ராஜம்மாவின் வீட்டில் 2 பல்புகள் மற்றும் ஒரு தொலைக்காட்சி உள்ளன. அவர் முந்தைய மின் கணக்கீடு தொகை ரூ.229 என செலுத்தி இருந்தார். ஆனால் தற்போது அவர் வீட்டுக்கு ரூ.11,359 மின் கட்டணம் குறிக்கப்பட்டுள்ளது. அதாவது முந்தைய மின் கணக்கீட்டை காட்டிலும் 40 மடங்கு அதிகம். இத்தனைக்கும் மின்சார அமைச்சர் எம்.எம் மணியின் பூர்வீக பகுதி ராஜக்காடு ஆகும்.

ஏலக்காய் தோட்டத்தில் தினசரி கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கும் ராஜம்மாவுக்கு இது மிக,மிகப் பெரிய தொகையாகும். இந்த முறை ரூ.5,601 கதவு-பூட்டு (டி.எல்) சரிசெய்தலாக அவரது மின் கட்டணமாக சேர்க்கப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கத்தின்போது மீட்டர் ரீடிங் செய்யப்படாததால் டி.எல் சரிசெய்தல் கடந்த நான்கு மாதங்களின் பயன்பாட்டில் பாதியாக கணக்கிடப்பட்டுள்ளது என்று கேரள மின்வாரியத் துறை கூறியுள்ளது.

வயரிங் பிரச்சினையால் மின்சாரம் இழப்பு ஏற்பட்டு இவ்வளவு யூனிட்கள் கணக்கிடப்பட்டு பெரிய மின் கட்டண தொகை குறிப்பிடப்பட்டு இருக்கும் என கேரள மாநில மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் உள்ள மற்ற குடியிருப்பாளர்களும் இதேபோன்ற புகார்களை தெரிவித்துள்ளனர்.