பெண் இறந்தது தெரிந்தும் ரோட் ஷோ... அல்லு அர்ஜூன் எப்படிப்பட்ட மனிதராக இருப்பார்?- ரேவந்த் ரெட்டி
ஜாமினில் வெளியே வந்த அல்லு அர்ஜுனை வரிசைக்கட்டி நேரில் சென்று பார்த்த திரைப்பட துறையினர் அவரால் இறந்த குடும்பத்தை பார்த்தார்களா? என முதல்வர் ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
புஷ்பா படம் பார்க்க வந்து தாய் இறந்து,மகன் கோமாவில் உள்ள சம்பவம் குறித்து தெலங்கானா சட்டப்பேரவையில் எம்.ஐ.எம்.கட்சி எம்.எல்.ஏ அக்பருதீன் கேட்ட கேள்விக்கு பதில் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, புஷ்பா படம் பார்க்க படத்தின் ஹீரோ ஹீரோயின் படக் குழுவினர் வருவதாக போலீஸாருக்கு முன் கூட்டியே பாதுகாப்பு கேட்டு தியேட்டர் நிர்வாகத்தினர் கடிதம் வழங்கினர். ஆனால் சந்தியா திரையரங்கிற்குள் நுழையவும், வெளியேறவும் ஒரே வழி உள்ளதால், பிரபலங்கள் வந்தால் பிரச்னை ஏற்படும் என்பதால் போலீசார் அனுமதி வழங்கவில்லை.
புஷ்பா படம் பார்க்க அனுமதி தராத போதும் பட ஹீரோ தியேட்டருக்கு சென்றார். நேரடியாக தியேட்டருக்குப் போய் படம் பார்த்துட்டு சென்றிருந்தால் பிரச்சனை வந்திருக்காது. ஆனால் தியேட்டருக்கு செல்லும் வழியில் காரின் ரூப் டாப் திறந்து ரோட் ஷோ செய்து கொண்டிருந்தனர். இதனால் அதை ஒட்டிய அனைத்து தியேட்டர்களில் இருந்தவர்கல் ஒரே நேரத்தில் சந்தியா தியேட்டரை நோக்கி பொதுமக்கள் வந்தபோது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் தாய் ரேவதி உயிரிழந்தார். அவளுடைய மகன் கோமா நிலைக்குச் சென்றான். பின்னர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்குள் சென்ற பிறகு கூட்ட நெரிசலை போலீசார் கலைத்து பார்த்தபோது ஒரு தாயும் மகனும் கைகளை பிடித்தபடி எந்த வித அசைவும் இல்லாமல் இருந்தனர்.
உடனடியாக போலீசார் முதலுதவி சிபிஆர் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் ரேவதி உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் தற்பொழுதும் கோமாவில் உள்ளார். இருப்பினும் அல்லு அர்ஜுன் தியேட்டருக்குள் படம் பார்த்துக் கொண்டே இருந்ததால் வெளியே ரசிகர்கள் அப்படியே சூழ்ந்து இருந்தனர். பெண் உயிரிழந்தது குறித்து அல்லு அர்ஜுனிடம் போலீசார் தெரிவித்த போதிலும், தியேட்டரை விட்டு வெளியேறாமல் காரில் நின்றுகொண்டு கை அசைத்துக் கொண்டிருந்தார்.அவர் எப்படிப்பட்ட மனிதராக இருப்பார்? போலீசார் கைது செய்வோம் என மிரட்டிய பிறகே அல்லு அர்ஜுன் தியேட்டரை விட்டு வெளியேறினார். தியேட்டருக்குள்ளும் அவர் பால்கனியில் அமர்ந்திருந்தால் கீழே இருந்த ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக மேலே ஏற முயன்றனர். அங்கேயும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது பின்னர் போலீசார் தங்கள் கடமையை செய்ய தடுப்பவர்கள் மீது வழக்கு தொடரப்படும் எனக்கூறிய பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு வலுக்கட்டாயமாக அல்லு அர்ஜுனை தியேட்டரில் இருந்து வீட்டிற்கு செல்லும்படி வெளியேற்றினர்.
அதன் பிறகு அல்லு அர்ஜுன் மீதும் தியேட்டர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பாதிக்கும் நடுத்தர குடும்பத்தினர் தனது மகன் அந்த ஹீரோவின் ரசிகன் என்பதால் ஒருவருக்கு ரூ. 3,000 டிக்கெட் என 4 பேருக்கு ரூ.12 ஆயிரம் செலவு செய்து படம் பார்க்க வந்து தாய் இறந்து மகன் உயிரிக்கு போராடி வருகிறான். ஒரு குடும்பமே சிதைந்துவிட்டது. இவ்வளவு பணம் செலவழித்து படம் பார்க்க வந்த ரேவதி இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்தை பார்க்கக்கூட அவரே படக்குழுவே திரைப்படத் துறையினர் ஒருவர் கூட செல்லவில்லை. ஆனால் அல்லு அர்ஜுன் ஜாமினில் வெளியே வந்தால் ஏதோ கண்ணோ, கால் இழந்தது போன்று வரிசைக்கட்டி கொண்டு அவரை பார்க்க சென்றனர். அரசையும் போலீசாரையும் சில அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர்.
அம்பேத்கர் வகுத்த அரசியல் சாசனத்தின் கீழ் இந்த அரசு இயங்குகிறது. அல்லு அர்ஜுனால்தான் சந்தியா தியேட்டர் சம்பவம் நடந்தது. அவர் வரவில்லை என்றால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது, ரேவதியின் குடும்பம் பாதிக்கப்பட்டிருக்காது. இதற்கு காரணமானவர்கள் யாரும் தப்பவிடமாட்டோம் என்றும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இனி தெலங்கானாவில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி தரப்படாது; டிக்கெட் கட்டண உயர்வுகளும் இருக்காது” என்றார்.