'மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக' பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

 
modi

விவசாயிகளின் போராட்டங்களுக்கு மத்தியில் 3 வேளாண் சட்டங்கள் திரும்பப்படுவதாக  பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஓராண்டாக டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாமல் இழுத்தடித்து வந்தது. இதில் பல விவசாயிகள் குளிரிலும். போராட்டத்திலும் தங்களின் உயிரை இழந்தனர்.

modi

இந்நிலையில் இன்று நாட்டு மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, "நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க பாடுபடுகிறோம்; விவசாயிகளின் பிரச்னைகளை அருகிலிருந்து பார்த்து உணர்ந்து வருகிறேன்.விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க 2014ஆம் ஆண்டிலிருந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்; வேளாண் உற்பத்தியை அதிகரித்துள்ளோம்.வேளாண் விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம்; விவசாயிகள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் கடந்த காலத்தில் 5 மடங்கு அதிகரித்துள்ளது.3 புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டுவரப்பட்டது. தற்போது  3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவுசெய்துள்ளோம். புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும்; அதில் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், வேளாண்  வல்லுனர்கள் இடம்பெறுவர்" என்றார். 

modi

தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளின் நலனை பாதுகாப்பதே மத்திய அரசின் நோக்கம். நாட்டின் விவசாயிகளில் 80 சதவீதம் பேர் சிறு  விவசாயிகளாக உள்ளனர் .விவசாயிகளின் வேதனைகளை அறிந்தவன் என்பதால் தான் அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன்.  3 புதிய வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதால் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வீடு திரும்பவேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.