சபரிமலையில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!

 
ttn


கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகர விளக்கு, மண்டல பூஜை ஆகியவை நடைபெறும்.  இந்த நாட்களில் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை கடைப்பிடித்து, ஐயப்பனை தரிசனம் செய்ய வருவர். அந்த வகையில் கார்த்திகை மாதம் தொடங்கியதை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கியது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் தினமும்  30 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. 

ttn

இந்த சூழலில்  சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை  விதித்து  ஆட்சியர் திவ்யா உத்தரவிட்டார்.  பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை காரணமாக பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. தொடர் மழை காரணமாக கல்கி அணையிலிருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இதனால் மழை குறைந்து பம்பை ஆற்றில் நீர்வரத்து குறைந்த பின் ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு நேற்றிரவு வெளியிடப்பட்டதால் வெளியூர் பக்தர்கள் நிலக்கல்லில் தங்கி, மழை குறைந்த பின் சாமி தரிசனம் செய்ய முடிவெடுத்தனர். 

sabarimala

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. மழை நின்று பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நிலக்கலில் தங்கியிருக்கும் வெளிமாநில பக்தர்களை படிப்படியாக கோவிலுக்குள் அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். நீண்ட தூரத்தில் இருந்து வரும் பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.