மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வு காண என்ன செய்ய வேண்டும்? - ப.சிதம்பரம் அறிவுரை
மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வு காண என்ன செய்ய வேண்டும்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அறிவுரை கொடுத்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மெய்தி மற்றும் குகி ஆகிய இரு சமூக மக்களிடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இன்று வரை இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு எட்டப்படவில்லை. மணிப்பூர் கலவரம் விவகாரத்தில் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதேபோல் அம்மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசும் இது தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கவில்லை என புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில், மணிப்பூரில் பாஜக கூட்டணியில் இருந்து தேசிய மக்கள் கட்சி அதிரடியாக விலகியது. பாஜகவுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கோன்ராட் சங்மா, ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வு காண என்ன செய்ய வேண்டும்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அறிவுரை கொடுத்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், மணிப்பூரில் மேலும் 5,000 மத்திய ஆயுதப்படை காவலர்களை குவிப்பது அம்மாநில பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான வழியல்ல. முதலமைச்சர் பைரன் சிங்தான் மணிப்பூர் பிரச்னைக்கு காரணம் என ஒப்புக்கொண்டு அவரை பதவியில் இருந்து நீக்குவதே அறிவார்ந்த செயல்.
உண்மையான மாநில சுயாட்சி இருந்தால்தான் மெய்தி, குக்கி-சோ, நாகா மக்கள் மணிப்பூரில் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற புரிதல் அவர்களுக்கு வர வேண்டும். பிரதமர் மோடி பிடிவாதத்தை விட்டுவிட்டு மணிப்பூருக்குச் சென்று அம்மக்களின் கஷ்டங்களையும், கோரிக்கைகளையும் பணிவுடன் கேட்டறிவதே சிறந்த அரசியல் பண்பாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.