இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி
இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 1970-களில் பரவிய குரங்கு அம்மை பாதிப்பு, அதன் பின்னா் முடிவுக்கு வந்தது. தற்போது பல்வேறு நாடுகளில் அந்நோய் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. இருந்தாலும், அண்டை நாடுகளில் அத்தகைய பாதிப்பு இருக்கும்பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டு வருகிறது. விமான நிலையங்களில் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு, வெப்ப நிலை அதிகமாக இருப்பவர்களை கண்டறியப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளது, இளைஞருக்கு ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக பொதுமக்களுக்கு எந்த அபாயமும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இளைஞருக்கு ஏற்பட்டுள்ள தொற்று clade 2 வகையை சார்ந்தது என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள Clade 1 வகையை சார்ந்தது அல்ல எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வகை நோய் தொற்று 2022, ஜூலை மாதம் இந்தியாவில் காணப்பட்ட குரங்கம்மை நோய் தொற்றாகும்.