கேரளாவில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து!
நாட்டையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவு சம்பவம் எதிரொலியாக இந்த ஆண்டும் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
ஓணம் அல்லது ஆவணி திருவோணம் எனப்படும் இப்பண்டிகை கேரளாவின் முக்கியப் பண்டிகையாகும். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்த நாளாகவும் வாமனர் அவதரித்ததும் அன்றுதான் எனவும் குறிப்புகள் உள்ளன. இதைக் கேரளத்தில் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், கேரளாவில் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். அன்றைய நாளில் விதம் விதமான உணவுகளை செய்து உண்பர். புட்டு, கிழங்கு, பயறு என்பவை மிக முக்கியமாகும். இந்தாண்டு ஓணம் பண்டிகை செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 15 வரை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் வரலாறு காணாத பேரிடரான வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், வரவிருக்கும் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை கேரளா அரசு ரத்து செய்துள்ளது. மக்கள் தங்கள் இல்லங்களில் எளிமையாக ஓணம் கொண்டாடி, வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பேரிடரில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.