2026ல் இந்தியாவில் நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்படும் - அமித்ஷா..

 
Bihar amitsha

2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் நக்சலிசம் முழுவதுமாக ஒழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

நக்சலைட்டுகளால்  பாதிக்கப்பட்ட சத்தீஸ்கரை சேர்ந்த மக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சந்தித்தார். அப்போது நக்சலைட்டுகள் ஒரு காலத்தில் நேபாளம் முதல் ஆந்திர பிரதேச மாநிலம் வரை அவர்களுக்கான வழித்தடத்தை அமைத்திருந்ததாகவும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி காலத்தில் அவை முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட மக்களை அரசுடன் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய நலத்திட்டங்களை விரைவில் மத்திய அரசு வெளியிட உள்ளதாக கூறினார். 

amitshah modi

நடப்பாண்டில் மட்டும் நக்சல் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ் 164 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் 142 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் தெரிவித்துள்ளார். மேலும் நக்சல்கள் அனைவரும் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைய வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ள அமித்ஷா,  2026 மார்ச் மாதத்திற்குள் நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்படும் என்று தெரிவித்தார்.