வெள்ளத்தின்போது உணவு, குடிநீர் கிடைக்கவில்லை எனக் கூறிய நபரை கன்னத்தில் அறைந்த அதிகாரி

 
Lady VRO Slaps Flood Victim Seeking Relief In Andhra Pradesh Vijayawada

விஜயவாடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உணவு, குடிநீர் கிடைக்கவில்லை என கேள்வி கேட்ட நபரை கன்னத்தில் அறைந்த அதிகாரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடா அஜித் சிங் நகர், ஷாதிகானா சாலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 கிலோ அரிசி, ஒரு லிட்டர் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் போலீசார் முன்னிலையில் கிராம வருவாய் அதிகாரி ஜெயலட்சுமி  வழங்கி வந்தார். அப்பொழுது அங்கு வந்த பொதுமக்கள்  கழுத்தளவு தண்ணீரில் நாங்கள் அவதிப்பட்டு கொண்டிருந்த போது ஒரு வாட்டர் பாட்டில் கொடுத்து விட்டு சென்றீர்கள். அந்த ஒரு பாட்டிலை வைத்து நாங்கள் பிழைத்தோமா, செத்தோமா என்று அதன் பிறகு பார்க்கவில்லை. அந்த நேரத்தில் எங்களுக்கு உணவு, குடிநீர் கிடைக்கவில்லை. இப்பொழுது வந்து விட்டீர்களா? என கேள்வி எழுப்பினர்.


இதனால் ஆத்திரம் அடைந்த பெண் கிராம வருவாய் அதிகாரி அவரை கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவர்கள் பட்ட துன்பத்தால் அவர்கள் நடந்து கொண்டாலும் அதனை புரிந்து கொள்ளாமல்  அதிகாரிகள் இதுபோன்று நடந்து கொள்வது அவர்களை மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த வீடியோ வைரலாக பரவியதால் கிராம வருவாய் அலுவலர் ஜெயலட்சுமியை  சஸ்பெண்ட் செய்து அரசு உத்தரவிட்டது.