‘இந்தியாவின் விலைமதிப்பற்ற மகனை இழந்துவிட்டோம்’ - கார்கே, ராகுல் இரங்கல்..
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பிரபலமான மற்றும் இந்தியத் தொழில்துறையில் தவிர்க்க முடியாத முக்கிய தொழிலதிபராக இருந்தவர் ரத்தன் டாடா. இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் ஒரு கேம்ஜேஞ்சராக விளங்கிய ரத்தன் டாடா, உடல்நலக்குறைவு காரணமாக முப்பையில் காலமானார். அவருக்கு வயது 86. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா, நேற்றிரவு சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், தொழில் துறையினர், பிரபலங்கள் என அனைத்த் தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர். அவர் வணிகம் மற்றும் கணிவான உள்ளம் ஆகிய இரண்டிலும் நீடித்த முத்திரையை பதித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தினருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: “ ரத்தன் நேவல் டாடாவின் மறைவில், இந்தியாவின் விலைமதிப்பற்ற மகனை இழந்துவிட்டோம். இந்தியாவின் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பு மிக முக்கியமான ஒரு பரோபகாரர், டாடா தெளிவான ஒருமைப்பாடு மற்றும் நெறிமுறை தலைமைக்கு ஒத்ததாக இருந்தார்.
அவர் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஒரு உத்வேகமாகவும் அடையாளமாகவும் இருந்தார், மேலும் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை வழங்கினார். அவரது அன்புக்குரியவர்களுக்கும், அன்பர்களுக்கும் எமது அனுதாபங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.