12 வயது சிறுவனை கடித்துக் குதறிய தெருநாய்.. பதைக்க வைக்கும் வீடியோ..

 
12 வயது சிறுவனை கடித்துக் குதறிய தெருநாய்..  பதைக்க வைக்கும் வீடியோ..

கேரளாவில் சைக்கிளில் சென்ற 12வயது சிறுவனை வெறிநாய் விரட்டிக் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கேரளாவில் அண்மைக்காலமாக தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.  சாலைகளில் செல்லும் நபர்களை  விரட்டி, கடித்துக் குதறுவது போன்ற சம்பவங்களும்,  தொடர்ந்து தெரு நாய்களால் சிறுவர்கள் பாதிப்பிற்கு ஆளாகும் சம்பவங்களும்  அதிகரித்து வருகின்றன.  அப்படியாக  கடந்த 8 மாதங்களில் மட்டும் 21 பேர் நாய் கடித்து உயிரிழந்துள்ளனர்.  ஏற்கனவே  கேரளாவில் தெருவில் வருபவர்களை 10-15 நாய்கள் ஒன்றாக துரத்தி கடித்து குதறும் சம்பவம் வீடியோவாக வெளியானது.

street dogs

 இந்த நிலையில்  தற்போது, கோழிக்கோட்டில் உள்ள அரக்கிணறைச் சேர்ந்த 12 வயது சிறுவனை  நாய் கடித்து குதறிய சம்பவம்  அரங்கேறியுள்ளது.  நூராஸ் என்கிற அந்த சிறுவன் வீட்டிற்கு வெளியே சைக்கிளில் குழந்தைக்கு விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தபோது,  ஏதோ காத்திருந்து பழிவாங்குவது போல் திடீரென ஓடிவந்த நாய் ஒன்று சிறுவன் மீது பாய்ந்தது.  நாய் பாய்ந்ததும் நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுவனை விடாமல் கை, கால் என கண்மூடித்தனமாக கடித்துக் குதறியது.   பின்னர் கையால் விரட்ட தள்ளிய போது கையை கவ்விக்கொண்ட அந்த நாய்,  விடாமல் பலமாக கடித்து குதறியது.  

street Dogs

அப்போது சிறுவனுடன்  அருகில் இருந்த குழந்தையை வீட்டிற்குள் இருந்தவர்கள் உடனே  தூக்கிக்கொண்டதால் குழந்தை தப்பித்தது. ஒருவழியாக அந்த நாயின் பிடியில் இருந்து தப்பிய அந்த சிறுவன்  வீட்டிற்குள் சென்று கேட்டை சாத்திகொண்ட பிறகு அந்த நாய் அங்கிருந்து ஓடிச்சென்றது.  காண்போரின் நெஞ்சை பதைக்க வைக்கும்   இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக  பரவி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் வெறிநாய்களை கொல்ல நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.