ஜப்பான் ஸ்டைலில் இந்தியன் ரயில்வே அறைகள் - கண்கவரும் "Pod Room" போட்டோக்கள்!

 
பாட் அறைகள்

ஜப்பான் நாட்டில் Pod Hotel எனப்படும் சிறிய அறைகள் கொண்ட ஹோட்டல்கள் மிகவும் பிரபலமான ஒன்று. இதனை Capsule Hotel என்றும் அழைக்கிறார்கள். அதாவது பெரிய அறைகளாக இல்லாமல் ஒருவர் மட்டுமே தங்கக் கூடிய சிறிய அறையாக இருக்கும். சுற்றுலாப் பயணிகள் ஒரு நாள் மட்டும் தங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டது. அந்த சிறிய அறைக்குள்ளாகவே அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இதன் வாடகையும் மலிவு. இதனால் இது அந்நாட்டு மக்களிடையேயும் சுற்றுலாப் பயணிகளையிடையேயும் பெரும் வரவேற்பு பெற்ற அம்சமாக இருந்தது.

Image

தற்போது இதே ஸ்டைலை இந்திய ரயில்வே துறையும் கையாண்டுள்ளது.  இந்த ஹோட்டல் முதற்கட்டமாக மும்பை மத்திய ரயில்வே நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயில் பாட் ஹோட்டல் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதன்முறை. இதனை வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே திறந்துவைத்தார். ரயில் பயணிகள் மட்டுமில்லாமல், சாதாரண மக்களும் தங்கும் வகையில் Pod Hotel-ஐ உருவாக்கியுள்ளது. 

இதனால் இந்த ஹோட்டலுக்கு பெரும் வரவேற்பும், ரயில்வே துறைக்கு லாபமும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பாட் அறைக்குள் வைபை வசதி, டிவி, சிறிய லாக்கர், சரிசெய்யும் வகையிலான கண்ணாடி, புத்தகம் படிப்பதற்கான லைட், மொபைல் சார்ஜிங் பாய்ன்ட், ஏர் ப்யூரிபைர் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மூன்று பிரிவுகளில் மொத்தம் 400 பாட் அறைகள் ரயில்வே நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் 12, 24 மணி நேரத்திற்கேற்ப முன்பதிவு செய்யலாம். ரூ. 999 மற்றும் ரூ.1,999 வாடகை கட்டணம். தனிநபர் கட்டணம் 12 மணி நேரத்திற்கு ரூ.1,249. 24 மணிநேரத்திற்கு ரூ.2,499.