ஒயின் ஷாப்பிற்கு திருட வந்தவன் சரக்கு அடித்து மட்டையானதால் போலீசில் பிடிப்பட்ட சோகம்
தெலங்கானாவில் திருட வந்த இடத்தில் மது அருந்தி ஆழ்ந்து தூங்கியதால் திருடன் போலீசில் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் நரசிங்கி நகரில் பர்ஷா கவுட் என்பவர் கனகதுர்கா என்ற பெயரில் ஒயின் ஷாப் வைத்துள்ளார். வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் கடை வியாபாரத்தை முடித்து கொண்டு நள்ளிரவு 11.30 மணிக்கு கடையை மூடிவிட்டு உரிமையாளர் வீட்டுக்குச் சென்றார். அதன் பிறகு அங்கு வந்த மர்ம நபர் கடையில் மேற்கூரையில் இருந்த இரும்பு ஷீட்டை கட் செய்து ஒயின் ஷாப் உள்ளே சென்றார்.
பின்னர் கடையில் பணம் வைத்திருந்த கவுண்டரில் இருந்த ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு தனக்கு பிடித்து விலை உயர்ந்த மதுபானங்களை கொண்டு வந்த பையில் வைத்து கொண்டான். மேலும் சி.சி.கேமிரா ஒயர்களை சேதப்படுத்தி அதன் ஹார்ட்டிஸ்க் எடுத்து கொண்டான். வெளியே செல்ல இருந்தபோது மது பாட்டில்களைக் கண்டதும் மனதுக்குள் குடித்துவிட்டு செல்லலாம் என முடிவு செய்து குடிக்க ஆரம்பித்து சுயநினைவை இழந்து அங்கேயே தூங்கினான். மறுநாள் காலையில் வழக்கம் போல் பர்ஷா கவுட் மதுக்கடையை திறந்து பார்த்தபோது உள்ளே திருடன் படுத்திருப்பதை கண்டார். மேலும் அருகில் பணம், மது பாட்டில்கள் இருந்ததால், உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். நரசிங்கி எஸ்.ஐ. அகமது மொகினுதீன் அங்கு வந்து திருடனை கைது செய்தார். மது போதையில் சுயநினைவை இழந்த திருடனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.